"நீட்' தேர்வுக்கு விலக்கு கோருவோம்: கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோருவோம் என, கம்பத்தில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோருவோம் என, கம்பத்தில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
  ஹிந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கக் கோரியும், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.  
   ஹிந்தி திணிப்பு குறித்த கருத்தரங்கில் கனிமொழி பேசியதாவது: ஹிந்தி திணிப்பை ஏற்கமுடியாது. ஹிந்தி தேசிய மொழி அல்ல. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போல் அதுவும் 22 ஆட்சி மொழிகளில் ஒன்று. நாம் எதையெல்லாம் எதிர்க்கிறோமோ அதையெல்லாம் மோடி அரசு ஒவ்வொன்றாக திணிக்கப் பார்க்கிறது.    இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதுவரைக்கும் தமிழக மாணவர்களுக்குத் தான் முழுமையாக இடம் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது, மத்திய அரசாங்கம் நீட் தேர்வுகள் வழியாக அதிலும் ஒரு பங்கை எடுத்து ஹிந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப் பார்க்கிறது.    மேலும், இது இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஒன்று. இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் இல்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்காக கொண்டுவரப்பட்டது.
இடஒதுக்கீடு என்பது தமிழகத்தின் அரசியலோடு, சமூக நீதியோடு கலந்தது. அதற்கு எதிரான ஒரு விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.  திமுக ஆட்சிக்கு வந்தால், நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுபோல், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோருவோம் என்றார்.
இதில், நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவை உறுப்பினரான கோவி. செழியன் சிறப்புரையாற்றினார். பின்னர், கனிமொழி மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். கருத்தரங்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எல். மூக்கையா, தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பெ. செல்வேந்திரன், மாநில விவசாய சங்க துணைத் தலைவர் என். ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  முன்னதாக, நகரச் செயலர் சிங். செல்லப்பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பண்ணை குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com