தேனி மாவட்டத்தில் சூறைக் காற்றால் 319 ஹெக்டேர் வாழைகள் சேதம்: ஆட்சியர் தகவல்

தேனி மாவட்டத்தில் கடந்த மே 18-ஆம் தேதி சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 319 ஹெக்டேரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள்

தேனி மாவட்டத்தில் கடந்த மே 18-ஆம் தேதி சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 319 ஹெக்டேரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமடைந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குநர் மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக(உதவியாளர்) வேளாண்மை சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் விவசாயிகள் பேசியதாவது: மாவட்டத்தில் கடந்த மே 18-ஆம் தேதி சூறைக் காற்றுடன் பெய்த மழையால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வாழைகள் ஒடிந்து விழுந்தும், போடி, பெரியகுளம் பகுதியில் மாங்காய் மற்றும் பிஞ்சுகள் உதிருந்தும் சேதமடைந்துள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சூறைக் காற்றால் சேதமடைந்துள்ள மரங்களை பொது ஏலத்தில் வைத்து வெட்டி அகற்ற வேண்டும்.
 போடி மலை, வண்ணாத்திப்பாறை வனப் பகுதிகளில் பட்டா நிலங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேல் முதிர்ந்த நிலையில் உள்ள தேக்கு மரங்களை வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
சோலையூர், சிறக்காடு பகுதியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மடைகளை சீரமைக்க வேண்டும். சண்முகநதி நீர்தேக்கப் பகுதியில் நீரருந்த கால்நடைகளை வழக்கமான பாதையில் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்றனர்.
 இதற்கு பதிலளித்து ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியதாவது: மாவட்டத்தில் சூறைக்காற்றால் 319 ஹெக்டேரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் ஒடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதில், 338 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை மற்றும் வருவாய்த் துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
 இதுகுறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தரப்படும். விவசாயிகள், தங்களது பயிர் உற்பத்திச் செலவில் 5 சதவீதத்தை பிரிமியமாகச் செலுத்தி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால், உரிய இழப்பீட்டுத் தொகை பெற்று நஷ்டத்தை தவிர்க்கலாம். வனப் பகுதியில் பட்டா நிலங்களில் உள்ள முதிர்ந்த மரங்களை வெட்டுவதற்கு உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com