கேரளாவில் பெண் கொலை: சின்னமனூரில் பெண் உள்பட 3 பேர் கைது

கேரள மாநிலம் கட்டப்பணையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேனி மாவட்டம் சின்னமனூரில் மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கேரள மாநிலம் கட்டப்பணையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேனி மாவட்டம் சின்னமனூரில் மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கேரள மாநிலம் கட்டப்பணையில் தேனி மாவட்டம் நாராயணத் தேவன்பட்டியைச் சேர்ந்த வசந்தி (47) கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து கட்டப்பணை போலீஸர் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளர் அணில் குமார் தலைமையில் கொலையாளிகளை தேடி வந்தனர். இக்கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும்,  அவர்கள் தேனி மாவட்டத்தில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் உதவியுடன், இக்கொலை தொடர்பாக  சின்னமனூர் காந்தி நகரில் பதுங்கி இருந்த கண்ணையா மகன் ராஜா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த காளி மகன் சங்கர் மற்றும் கோம்பை சிங்கார நகரைச் சேர்ந்த மணிராஜ் மனைவி மகாலட்சுமி (45) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கேரள போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கேரள போலீஸார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட வசந்தியும்,  மகாலட்சுமியும் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வசந்தி கேரள மாநிலம் கட்டப்பணை பகுதியில் குடியேறியுள்ளார்.
இதனிடையே  கைது செய்யப்பட்டுள்ள சங்கர் மற்றும் தனியார் பள்ளியில் ஓட்டுநராக உள்ள ராஜா ஆகிய இருவருக்கும் மகாலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மகாலட்சுமி,  தனது தோழி ஒருவர் கேரளவில் இருப்பதாகக் கூறி சங்கர், ராஜா இருவரையும் அழைத்துக் கொண்டு கட்டப்பணையில் வசித்து வந்த வசந்தியிடம் செப். 1 ஆம் தேதி சென்றுள்ளார்.
 அங்கு வசந்தியுடன் சங்கர் மற்றும் ராஜா இருவரும் தங்கியிருந்தனர். அதன் பின்னர் இவர்களும், மகாலட்சுமியும் சேர்ந்து வசந்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
 எனவே இக்கொலை பணம்,  நகைகளுக்காக நடந்ததா அல்லது மகாலட்சுமி- வசந்தி இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக நடந்ததா என விசாரித்து வருகிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com