தேனி, திண்டுக்கல்லில்அரசு ஊழியர்கள் 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் வியாழக்கிழமை 2ஆவது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் காத்திருப்பு

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் வியாழக்கிழமை 2ஆவது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,136 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.முபாரக் அலி, ஜெ.எஸ்.ஆர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் டி.குன்வர் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மதிய உணவு தயாரிக்கப்பட்டு, போராட்டத்தில் பங்கேற்றோருக்கு விநியோகம் செய்யப்பட்டது. மதிய உணவுக்குப் பின் கைது நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த நிலையில் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில் 10,391 பேர் பணிபுரிகின்றனர். இதில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 1,800 பேர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் 12,560 அரசு ஊழியர்களில் 3,410 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 5,210 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற போதிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் சுமார் 1,500 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தேனியில் 1,136 பேர் கைது: 8-வது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வில் 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற 866 பெண்கள் உள்பட மொத்தம் 1,136 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய ஊழியர்களை பிற்பகல் 1.30 மணிக்கு தேனி காவல் துணைக் காணிப்பாளர் சேது தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.
வேலை நிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமையும் (செப். 15) ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com