பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரியில் பழக் கண்காட்சி

பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரியில் பழ உற்பத்தி கருத்தரங்கம் மற்றும் பழகண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரியில் பழ உற்பத்தி கருத்தரங்கம் மற்றும் பழகண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கோவை விவசாய பல்கலைக் கழக துணைவேந்தர் கே.ராமசாமி தலைமை வகித்து பேசினார். கோவை தோட்டக் கலைக் கல்லூரி முதல்வர் ஜவஹர்லால் வரவேற்றார். இதில் பங்கேற்று புதுதில்லி இந்திய தோட்டக்கலைத்துறை ஆணையர் மூர்த்தி பேசியதாவது:
விவசாயிகள் தானிய உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டுவது போல் தோட்டக் கலையிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அதிக சத்துள்ள பலா, நாவல், சீத்தாப் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது.
எனவே இப்பழங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. தரமான பழங்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து அதிக வருமானம் பெறலாம் என்றார்.
புதுதில்லி சர்வதேச பல்லுயிர் மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் பேசும் போது, பலா பழத்தில் 1000 வகைகள் உள்ளன. சாக்லேட் தயாரிக்க பயன்படும் கோகோவை பலாப் பழத்தின் விதையில் இருந்து தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
நாவல் பழம், சர்க்கரை நோயையும், சீத்தாப் பழம் கேன்சர் நோயையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.
இப்பழங்கள் அஸ்ஸாம், ராஜஸ்தான், கர்நாடக பகுதிகளில் அதிகளவு உற்பத்தி செய்து, அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இப்பகுதியில் முருங்கை அதிகளவு வளர்கிறது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதில் பல்வேறு மாநில விஞ்ஞானிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரியகுளம், அரசு தோட்டக் கலைக் கல்லூரி முதல்வர் வி.சுவாமிநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com