கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள கண்மாயை தூர்வாரும் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள சிக்காளிகுளம் கண்மாயை, கண்மாய் தூர்வாரும் பட்டியலில் சேர்த்து, தூர்வார வலியுறுத்தி

கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள சிக்காளிகுளம் கண்மாயை, கண்மாய் தூர்வாரும் பட்டியலில் சேர்த்து, தூர்வார வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்பம், நாட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கம்பத்தில் சர்வே எண்: 1,431, 1,432/2 ஆகியவற்றில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் சிக்காளி குளம் கண்மாய் அமைந்துள்ளது. கம்பம் ஒன்றியம், ஆங்கூர்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய்க்கு, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து தனுக்கப்பாறை ஓடை, பனைமரத்து ஓடை ஆகியவற்றின் மூலம் நீர் வரத்து உள்ளது. இக்கண்மாய் சுற்றியுள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்களின் நிலத்தடி நீராதாரமாகவும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. 
தற்போது, சிக்காளிகுளம் கண்மாய் மற்றும் நீர் வரத்து ஓடைகளில் தனிநபர்கள் விவசாய ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். விவசாய நிலங்களுக்குச் செல்ல சாலை அமைத்தும், கண்மாய்க்குள் வேலி அமைத்தும் கண்மாய் இருந்த தடம் தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கண்மாயில் தண்ணீர் தேக்க முடியாமல், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
ஆனால், தண்ணீர் தேக்க  முடியாத சிக்காளி குளம் கண்மாய் கரையை சீரமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களை தூர்வாரும் பட்டியலில் சிக்காளி குளம் கண்மாய் சேர்க்கப்பட வில்லை. இதை பயன்படுத்தி, சிக்காளிகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது விவசாய ஆக்கிரமிப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளின் நீராதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.
எனவே, சிக்காளி குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாய் தூர்வாரும் பட்டியலில் சேர்த்து விவசாயிகள் மூலம் கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com