இடுக்கியில் 80,000 ஏக்கர் ஏலத் தோட்டங்கள் நாசம்: தமிழக தோட்டத்தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்

கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழையால் இடுக்கி மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள்  நிவாரண

கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழையால் இடுக்கி மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள்  நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டம் மற்றும் மூணாறில் உள்ள தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். கம்பம், உத்தமபாளையம், தேவாரம், போடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஜூன் 8, 9,10 ஆகிய தேதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஏலக்காய் தோட்டங்களில்  பெரும் சேதம் ஏற்பட்டன. மழை குறைந்து ஏலக்காய் தோட்டங்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி முதல் மீண்டும் பலத்த மழை  பெய்து வருகிறது.  இந்த மழையில் இடுக்கி மாவட்டம் மாலி, உடும்பன்சோலை, இஞ்சிப்படிப்பு, சாஸ்தான் ஓடை, ஜக்குபெல்லம், வாழவிடு, கட்டப்பனை உள்ளிட்ட இடங்களில்  80 ஆயிரம் ஏக்கர் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
 மழை நீடித்து வருவதால் ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
வர்த்தகம் முடங்கும் அபாயம்: குமுளி, புத்தடி, போடி ஆகிய இடங்களில் வாசனை பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஏலக்காய் ஏல விற்பனை நிலையங்களில், விவசாயிகள் ஏற்கனவே பதிவு செய்து இருப்பு வைத்திருந்த ஏலக்காய்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
சாந்தம்பாறை சி.பி.ஏ., விற்பனை நிலையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலக்காய் ஏல விற்பனையில், குறைந்த அளவில் 39,159 கிலோ ஏலக்காய் மட்டும் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. ஏலக்காய் சராசரியாக கிலோ ஒன்று ரூ.1,266-க்கு விற்பனையானது.   இனி வரும் நாட்களில் ஏலக்காய் விற்பனை மையங்களுக்கு ஏலக்காய் வரத்தின்றி வர்த்தகம் முடங்கும் அபாயம் உள்ளது என்று ஏலக்காய் விவசாயிகள் கூறினர்.
தொழிலாளர்கள் தஞ்சம்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் தங்கியிருந்து வேலை செய்து வரும் கேரள, தமிழக தொழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சடைந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளில் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.  
இதனால் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள தமிழக 
தோட்டத் தொழிலாளர்கள் தேனி மாவட்டம் வழியாக சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். 
கேரளத்தில் பலத்த மழை நீடிப்பதால் ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. எனவே நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க,  இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com