பி.டி.ஆர்., தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம், சின்னமனூரில் பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட

தேனி மாவட்டம், சின்னமனூரில் பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால், நாற்றாங்காலில் நெல் நாற்றுகள் கருகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
உத்தமபாளையம், சின்னமனூர், தேனி ஆகிய 3 ஒன்றியங்களைச் சேர்ந்த சீப்பாலக்கோட்டை,  வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, தப்புக்குண்டு, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி,ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகிளில் 5,146  ஏக்கர் பயன்பெறும் வகையில், கடந்த மாதம்  ஆகஸ்ட் 22  ஆம் தேதி 
 உத்தமபாளையம் அருகேயுள்ள வாய்க்கால்பட்டியிலுள்ள கருங்கட்டான்குளத்திலிருந்து  பி.டி.ஆர். கால்வாய்  மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.        120 நாள்களுக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர் விவசாயத்துக்கான பணிகள் மேற்கொண்டு நாற்றங்கால் அமைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள் மட்டும் தொடர்ந்து விடப்பட்ட பாசன நீர், அதன்பின்னர் நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக, இந்த பாசன நீரை நம்பி அமைக்கப்பட்ட நாற்றாங்கால் நீர் வரத்தின்றி கருகும் நிலையில் உள்ளதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 
     இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது: ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும்  பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் கால்வாய் பாசன நீரைப் பயன்படுத்தி, உத்தமபாளையம் உள்ளிட்ட 3 ஒன்றிய விவசாயிகள் பயன்பெறுகின்றனர். 
ஆனால்,  அறிவித்தபடி தண்ணீரை முறையாகத் திறக்காமல், அவ்வப்போது நிறுத்தப்படுவதால்  தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நெல் பயிர் உள்ளிட்ட விவசாயப் பணிகள் முழுமை பெறுமா  என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
     எனவே, தந்தை பெரியார் மற்றும் பி.டி.ஆர். கால்வாயை நம்பியுள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு,  அறிவித்தபடி 100 கன அடி வீதம் 120 நாள்களுக்கு  தண்ணீர் திறந்து விட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com