தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னணி சார்பில், தேனியில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. இந்த சிலைகள், தேனி, பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோயிலில் இருந்து வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 
பெரியகுளம் சாலை, மதுரை சாலை வழியாக அரண்மனைப்புதூர் முல்லைப் பெரியாறு வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில், மொத்தம் 116 சிலைகள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன.
இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற சிலைகள் ஊர்வலத்தில், நிறுவனத் தலைவர் பொன். ரவி, மாவட்டத் தலைவர் ராமராஜ், தேனி நகரத் தலைவர் வெங்கலாபாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டச் செயலர் உமையராஜன், நகரத் தலைவர் கார்த்திக், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரண்மனைப்புதூர் முல்லைப் பெரியாற்றில் சுவாமி சிலைகள் கரைக்கப்பட்டன. சனிக்கிழமை, சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுகிறது.
உத்தமபாளையம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உத்தமபாளையத்தில் கல்லூரிச் சாலை, பூக்கடை சந்தி, கிராமச்சாவடி, வடக்குத் தெரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல்வேறு வடிவங்களில் 50 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. 
இந்த சிலைகளை, ஊர்வலமாக எடுத்துச்சென்று, உத்தமபாளையம்  முல்லைப் பெரியாற்றில் ஞானாம்பிகை கோயில் படித்துறையில் கரைக்கப்பட்டன. 
முன்னதாக, உத்தமபாளையம், கோம்பை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பஸ்கரன் பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டார். உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சார்பு -ஆய்வாளர் இத்தீரிஸ் கான் , பிருந்தா உள்ளிட்ட  50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
கம்பம்:    தேனி மாவட்டம், கம்பம் நகரில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு சார்பில், 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்த ஊர்வலமானது, அரசமர வீதியில் வைக்கப்பட்டிருந்த 12 அடி உயர விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தில் 100-க்கும் மேலான சிலைகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் விழாக் குழுவினர் கலந்துகொண்டனர்.
    பின்னர், கம்பம் - சுருளிபட்டி சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 
    இதேபோல், இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு சார்பில், தி.பா. ராஜகுருபாண்டியன் தலைமையில் 27 ஆவது ஆண்டாக வாலகுருநாதன் அங்காளீஸ்வரி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த  9 அடி உயர விஜய கணபதி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகர் மற்றும் மறவப்பட்டி, ஏத்தகோவில், க.விலக்கு, பிராதுக்காரன்பட்டி, சக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 67 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை, 65-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 67 விநாயகர் சிலைகளையும் ஏற்றிக்கொண்டு, ஆண்டிபட்டி நகரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 
    ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியிலிருந்து வரிசையாக அணிவகுத்து வந்த வாகனங்கள் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, வைகை அணை ஆற்றில் கரைக்கப்பட்டன. 
முன்னதாக, ஊர்வலமாகச் சென்ற விநாயகர் சிலைகளை பொதுமக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
ஆண்டிப்பட்டி இந்து முன்னணி சார்பில், மாவட்ட மக்கள் தொடர்பாளர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு மொக்கராஜ், நகரச் செயலர் மணீஸ்வரன், பாஜக மாவட்டப் பொதுச் செயலர் வழக்குரைஞர் குமார், ஒன்றியச் செயலர் செல்வராஜ், நகரச் செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்டப் பொதுச் செயலர் ஜெயக்குமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.
இதில், நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com