காரைக்கால் பிரதான சாலைகளில் மரணப் பள்ளங்கள்!

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை, திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலை, திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை, திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலை, திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலை, காரைக்கால் - நெடுங்காடு சாலை என அனைத்தும்  மரணப் பள்ளங்களைக்கொண்டு காட்சியளிக்கின்றன.
இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க  புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில், பிரதான சாலைகளான காரைக்கால் பகுதி பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, திருநள்ளாற்றை உள்ளடக்கிய அம்பகரத்தூர் வரையிலான சாலை, நெடுங்காடு சாலை, மண்டபத்தூர் வரையிலான கடலோர சாலை ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன.
குறிப்பாக காரைக்கால் நகரில் அம்மாள் சத்திரம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரையிலான 5 கி.மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகிவிட்டது.  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.10 கோடியில் பூவம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரை (காரைக்கால் நகரப் பகுதியை தவிர்த்து) 7 மீட்டர் சாலையை இருபுறமும் தலா 1.5 மீட்டர் வீதம் அகலப்படுத்த தொடங்கிய பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 
சாலையை அகலப்படுத்த சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை மின்துறை நிர்வாகம் சற்றுத் தள்ளி நிறுவவேண்டும். இத்துறையின் அலட்சியத்தால் பொதுப்பணித்துறையால் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. 
திருமலைராயன்பட்டினம் பகுதி திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் வரையிலான 3 கி.மீ. கிழக்குப் புறவழிச்சாலையின் பல இடங்களில் ஏராளமான சரிவுகள், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் மின் வசதி இல்லை. இரவு நேரத்தில் இந்த புறவழிச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான 6 கி.மீ. சாலை என்பது மிக முக்கியமானதாகும். இந்த சாலை பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில், அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையாகும்.
இந்த சாலையை புதுப்பிக்க கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய வடகிழக்குப் பருவமழையால், இந்த சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு அபாயகரமான சாலைகளாக காட்சியளிப்பது காரைக்கால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், இன்னும்  2 வாரத்தில் திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிலும், அடுத்தடுத்த சனிக்கிழமையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இவர்களும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் நிலையே உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் கூறியது:
 திருநள்ளாறு  - அம்பகரத்தூர் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை அடுத்த சில நாள்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே இந்த சாலையில் சனிப்பெயர்ச்சியை கருத்தில்கொண்டு தாற்காலிக சீரமைப்புப் பணி  மேற்கொள்ளப்படும். அம்மாள் சத்திரம் - திருமலைராஜனாறு பாலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பணி மழை ஓய்ந்தவுடன் ஜனவரி மாதம் முதல் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 இந்த சாலையை மேலும் அகலப்படுத்தி, விளக்குகள் அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது. அடுத்த வாரம் காரைக்காலுக்கு நேரில் வந்து இவற்றை ஆய்வு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆட்சியாளருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் இருப்பதாலேயே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு குறித்த காலத்தில் கிடைக்கவில்லை. யூனியன் பிரதேசத்தில் அதிகாரம் தமக்கே இருப்பதாகக் கூறும் துணை நிலை ஆளுநரோ, இதுபோன்ற பிரதான பிரச்னையில் கவனம் செலுத்தாமல், சிறிய யூனியன் பிரதேசத்தில் போட்டி அரசு நடத்துவதாலேயே பல்வேறு பிரச்னைகள் தீர்வின்றி கிடப்பில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வருகிற புத்தாண்டின் தொடக்கத்திலாவது சாலைகளுக்கு விமோசனம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் பலருக்கும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com