நகரமைப்புக் குழும அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தல்

காரைக்காலில் செயலற்ற நகரமைப்புக் குழும அலுவலரை புதுச்சேரி அரசு உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் செயலற்ற நகரமைப்புக் குழும அலுவலரை புதுச்சேரி அரசு உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் என்ஜினியர்ஸ் அண்டு பில்டர்ஸ் அசோசியேஷன் (கேபா) தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது ராமகிருஷ்ணன் கூறியது:
காரைக்காலில் செயல்பாடு இல்லாத துறையாக நகரமைப்புக் குழும நிர்வாகம் உள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் காரைக்கால் நகரமைப்புக் குழும அலுவலராக பணியில் உள்ளார். நகரமைப்புக் குழுமத்திடம் வரைபட அனுமதிக்காக கடந்த 6 மாதங்களாக அளித்த சுமார் 1,000 கோப்புகளுக்கு அனுமதி தராமல் முடக்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டால், தம்மை புதுச்சேரிக்கு மாற்றம் செய்துவிடுங்கள் என்கிறார். இவரது செயலற்றப் போக்கால் காரைக்காலில் கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதித்து வருகின்றனர். 
புதுச்சேரி அரசு உடனடியாக காரைக்கால் நகரமைப்புக் குழும அலுவலரை பணியிடமாற்றம் செய்து, தகுதியானவரை நியமிக்க வேண்டும்.  இதேபோல், இந்த நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த இளநிலைப் பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.
காரைக்காலில் பல்வேறு நிலையில் வளர்ச்சியடைவதற்கு நகரமைப்புக் குழுமத்தின் பணி மிகவும் முக்கியம். ஆனால், ஏற்றுக் கொண்ட பணியை செம்மையாகச் செயல்படாமல், தம்மை அவர் விரும்பும் பிராந்தியத்துக்கு அரசு மாற்ற வேண்டும் என்ற நோக்கில், மக்களை அவதிக்குள்ளாக்குவது வேதனையளிக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டினால், பொதுமக்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com