ஆளுநர் காரைக்கால் வருகையால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

துணை நிலை ஆளுநர் காரைக்கால் வந்ததன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும், எளிமை என்ற பெயரில் மக்களுக்கு அவதியையே அவர் ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

துணை நிலை ஆளுநர் காரைக்கால் வந்ததன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும், எளிமை என்ற பெயரில் மக்களுக்கு அவதியையே அவர் ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் வந்துவிட்டு புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் புறப்பட்டுச் சென்றதை அடுத்து,  காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் செயலர் ஆர்.எஸ். கருணாநிதி தலைமையில், காரைக்கால் எல்லையான பூவம் பகுதிக்குச் சென்ற காங்கிரஸார், ஆளுநர் வருகையை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், பாஜகவை புதுச்சேரியில் காலூன்றச் செய்யும் நோக்கில் துணை நிலை ஆளுநர் செயல்பாடு அமைந்துள்ளது.
மக்களுக்கு இலவச அரிசி வழங்கல், முதியோர் ஓய்வூதியம் வழங்கல் மற்றும் நலத் திட்டங்களை செய்ய ஆளும் அரசு நடவடிக்கை எடுத்தாலும், இவற்றுக்கு துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போட்டுள்ளார். மக்கள் நன்மையடையும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க சைக்கிளில் செல்கிறார்.
காரைக்காலில் ஆளுநர் வருகைக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதை புரிந்துகொண்ட ஆளுநர், அதிகாலையிலேயே காரைக்கால் வந்துவிட்டு சிறிது நேரத்திலேயே அவர் காரைக்காலை விட்டு புறப்பட்டுவிட்டார். எந்தவொரு ஆய்வுப் பணியையும் அவர் மேற்கொள்ளவில்லை. திட்ட முடக்கத்துக்கான நிலையை  அவர் அறியவில்லை. தூய்மை என்ற ஒரே கோஷத்தை வைத்துக்கொண்டு புதுச்சேரியை சுற்றி வருகிறார். எளிமை என்ற பெயரில் சைக்கிளில் வந்தார். ஆனால், அவரது பின்னால் ஏராளமான அரசு கார்கள்  பயணிக்கின்றன. மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டனர். இதுபோன்று மாணவர்கள், அரசுத் துறையினர் என பல நிலையினருக்கும் இவரது நடவடிக்கை வேதனையை ஏற்படுத்தியதை அறியமுடிகிறது.
ஒட்டுமொத்த புதுவை மக்களின் மேம்பாட்டுக்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துப்போனால் துணை நிலை ஆளுநர் எல்லோராலும் மதிக்கப்படுவார். இந்த நிலைப்பாட்டை அவர் எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com