மத்திய சமையலகங்களில் ஆட்சியர் ஆய்வு

திருமலைராயன்பட்டினம், ஊழியப்பத்து பகுதியில் மத்திய சமையலகங்களில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் திங்கள்கிழமை ஆய்வு

திருமலைராயன்பட்டினம், ஊழியப்பத்து பகுதியில் மத்திய சமையலகங்களில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் திங்கள்கிழமை ஆய்வு செய்து, மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு கல்வித் துறையினருக்கு உத்தரவிட்டார்.
காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட  25 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 2,500 மாணவ, மாணவியருக்காக திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் மேம்நிலைப்பள்ளி அருகே மத்திய சமையலகம் அமைந்துள்ளது. மேலும்,  32 பள்ளிகளில் 4,800 மாணவ, மாணவியருக்காக தலத்தெரு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு மத்திய சமையலகம் உள்ளது. இதுதவிர, மாவட்டத்தில்  ஒரு சில பள்ளிகளை உள்ளடக்கி 9 சிறிய சமையலகங்கள் உள்ளன.
சமையலகங்களை மேம்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகையை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், திருமலைராயன்பட்டினம் மத்திய சமையலகம், ஊழியப்பத்து சிறிய சமையலகத்துக்குச் சென்று திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார்.
மாணவர்களுக்கு அனுப்புவதற்காக சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுப் பார்த்தார். சமையலகங்களில் சுகாதார பராமரிப்பு முறைகளை அவர் ஆய்வு செய்தார். சமையலகங்களில்  எரிவாயு பயன்படுத்தும் முறை கொண்டு வர வேண்டும். சமையலகத்துக்கு என தனியாக சுகாதாரமான நீர் தேக்கம் அமைக்க வேண்டும். புதுச்சேரி  அரசு நிறுவனங்களில் இருந்து மளிகை பொருள்கள், காய்கறிகள் வருகின்றன. இது பல நாள்கள் கடந்து வருவதால், இதன் தன்மை மாறி வீணாகி விடுகிறது.
கும்பகோணத்திலிருந்து நேரடியாக காய்கறி வரவழைக்கவும், காரைக்காலில் மளிகைப் பொருள்கள் வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பொருள்களை பாதுகாத்து வைக்க வசதி செய்து தர வேண்டும்.
சமையலகங்களில் நிலவும் ஆள் பற்றாக்குறையை உடனடியாக போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை சமையலக பொறுப்பாளர்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
மாணவர்களுக்கு சுவையான உணவு சமைத்து அனுப்புவதோடு, சுகாதாரம், அனுப்பும் நேரம் உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.  ஆள் பற்றாக்குறை பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக சமையலகங்களில் மேற்கொள்ளவேண்டிய மேம்பாடுகள் குறித்து திட்ட அறிக்கை தயார் செய்து ஒரு வார காலத்துக்குள் தமக்கு தர வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. அல்லி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஊழியப்பத்து அரசு உயர்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பேசிய ஆட்சியர், ஆங்கில மொழி ஆளுமையை வளர்த்துக்கொள்ளும் விதத்தில் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com