சிறு வியாபாரிகளை ஊக்குவிப்பதற்கு இணக்கவரி செலுத்தும் முறை அமல்படுத்தப்படவுள்ளது: வணிக வரி துணை ஆணையர் கே.ஸ்ரீதர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் சிறு வியாபாரிகளை ஊக்குவிப்பதற்காக எளிமையான இணக்கவரி செலுத்தும் முறை அமல்படுத்தப்படவுள்ளது என வணிக வரி துணை ஆணையர் கே. ஸ்ரீதர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் சிறு வியாபாரிகளை ஊக்குவிப்பதற்காக எளிமையான இணக்கவரி செலுத்தும் முறை அமல்படுத்தப்படவுள்ளது என வணிக வரி துணை ஆணையர் கே. ஸ்ரீதர் கூறினார்.
புதுச்சேரி அரசு, வணிக வரித் துறையின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த வணிகர்களுக்கு விளக்கும் வகையிலான கருத்தரங்கம் காரைக்காலில் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அவர் பேசியது: சரக்கு மற்றும் சேவை வரி பல்வேறு திருத்தங்களுடன் ஏப். 1 அமலுக்கு வருகிறது. அனைத்து நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், தாங்கள் வழங்கும் விலைப்பட்டியல், ரசீதுகளில் திருத்தங்களை செய்து கொள்ளவேண்டும். வாட் மற்றும் சி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமைகிறது. ஜி.எஸ்.டி. செயல்முறையில் சரக்கு மற்றும் சேவைகள் எந்த மாநிலத்தில் நுகரப்படுகின்றனவோ, அந்த மாநிலத்துக்கு வரி வருவாய் சென்றடையும். புதிய பதிவு பெறுதல், வரி செலுத்துதல் அனைத்தும் ஜி.எஸ்.டி.என். போர்டல் என்ற வலைத்தளத்தின் மூலம் செயல்படுத்தப்படும். ஓராண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் விற்பனை இருக்கும்பட்சத்தில், அந்த நபர் ஜி.எஸ்.டி.யில் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் சிறு வியாபாரிகளை ஊக்குவிப்பதற்காக எளிமையான இணக்கவரி செலுத்தும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் வரி விகிதங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.
இதுதொடர்பாக சந்தேகம் எழுந்தால், வணிக வரித்துறையில் உள்ள உதவி மையத்தை அணுகலாம் என்றார் ஸ்ரீதர்.
வணிகர்கள், தொழிற்சாலையினர் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். கருத்தரங்கில் காரைக்கால் வணிக வரி அலுவலர் பூ. தேவராஜன், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் அமுதா ஆர். ஆறுமுகம் மற்றும் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com