மக்கள் நலன் கருதி பாழடைந்த அரசுக் கட்டடங்களை இடிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காரைக்காலில் 50 ஆண்டுகளைக் கடந்த பழைமையான அரசுக் கட்டடங்களை மக்கள் நலனை கருதி இடித்துவிட்டு, அங்கு வளர்ச்சித் திட்டப்பணிகளை

காரைக்காலில் 50 ஆண்டுகளைக் கடந்த பழைமையான அரசுக் கட்டடங்களை மக்கள் நலனை கருதி இடித்துவிட்டு, அங்கு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்காலில் மாவட்ட ஆட்சியரகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவை கட்ட புறநகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு புறநகர் பகுதியில் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைவதால் அங்கு சென்றுவர பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே, காரைக்கால் நகரின் மையப் பகுதியிலேயே மிகவும் பழைமையான, பயன்பாடில்லாத பல கட்டடங்கள், பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள அரசுக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் முக்கிய அரசு அலுவலகங்களை கட்டினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
காரைக்கால் பகுதியில் 1965- ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட பெரும்பாலான அரசுக் கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாததால் அவை பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், ஆதரவற்ற யாரும் அக்கட்டடங்களில் இருந்தால் அவர்களுக்கோ அருகில் குடியிருப்போருக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பழைமையான கட்டடங்கள்:
பழைய பேருந்து நிலையக் கட்டடம்,  திரையரங்கக் கட்டடம், பூங்கா, நகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்பு போன்ற பழைய கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி
உள்ளன.
இதில், காந்தி காலனியில் 25 குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டடம் 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பெரும்பாலானவை பாழடைந்துவிட்ட நிலையில், ஒரு சில வீடுகளில் வசிக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் அங்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
இதேபோல், தோமாஸ் அருள் வீதியில் கால்நடைத் துறை ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகமும் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இதில் உள்ள பல கட்டடங்கள் பழுதாகி ஆபத்தான நிலையில் உள்ளபோதும், அங்கு சிலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
காமராஜர் சாலை - கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள சுற்றுலாக் குழும அடுக்குமாடிக் கட்டடம் 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. இது சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. கட்டடம் பலவீனமானதையொட்டி மூடப்பட்டுவிட்டது. இவ்வாறான கட்டடங்களில் ஆதரவற்றோர், பிச்சையெடுப்போர் உள்ளிட்டோர் தங்குகின்றனர். இதனால், கட்டடம் இடிந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.எம்.இஸ்மாயில் கூறியது:
 தமிழகத்தில் பொறையாறு பேருந்து பணிமனை வளாகம் அண்மையில் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்பட்டது. அதுபோல, காரைக்காலில் பழுதடைந்த கட்டடங்கள் உள்ளன. குறிப்பாக பழுதடைந்துள்ள காந்தி காலனி வீடுகளில் இன்னும் மக்கள் வசிக்கின்றனர். பயனில்லாத குடியிருப்புகளும் அங்கு உள்ளன. குடியிருப்போருக்கு மாற்று இடத்தை அளித்துவிட்டு, மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கட்டடங்களை இடித்துவிட்டு அரசு பயன்பாட்டுக்கு புதிய கட்டடங்கள் கட்டலாம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனிடம் கேட்டபோது அவர் கூறியது:
காரைக்கால் மதகடி பகுதியில் மிகவும் பழைமையான பண்டகசாலைக் கட்டடத்தில் குடியிருப்புகள் பல உள்ளன. இந்த கட்டடம் மிகவும் பலவீனமடைந்துவிட்ட நிலையில், அங்கு குடியிருப்போரை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல நகரப் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல பழைமையான, பயன்பாடில்லாத கட்டடங்கள் இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து உரிய குழு அமைத்து ஆய்வு செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாகன நிறுத்துமிட வசதி:
காரைக்காலில் முக்கிய கடை வீதிகளில் வாகன நிறுத்தும் இடவசதி இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, திருநள்ளாறு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதிகளில் பாழடைந்த நிலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு வாகன நிறுத்தகம் அமைக்க வேண்டும் என்கிறார் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலர் ஜெ.சிவகணேஷ்.
பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com