காரைக்கால் புறக்கணிப்பை தீபாவளி அங்காடி திறப்பிலேயே காட்டுகிறது புதுச்சேரி அரசு: மதிமுக குற்றச்சாட்டு

காரைக்கால் புறக்கணிப்பை தீபாவளி சிறப்பு அங்காடி திறப்பிலேயே புதுச்சேரி அரசு காட்டுவதாக மதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

காரைக்கால் புறக்கணிப்பை தீபாவளி சிறப்பு அங்காடி திறப்பிலேயே புதுச்சேரி அரசு காட்டுவதாக மதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மதிமுக செயலர் சோ. அம்பலவாணன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் முந்தைய ரங்கசாமி அரசும், இப்போதைய நாராயணசாமி தலைமையிலான அரசும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை வெகுவாக குறைத்து, நியாயவிலைக் கடைகள் மூடப்படும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. இதனால் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் பெற முடியாத நிலையும் நீடிக்கிறது. ஆண்டுதோறும் காரைக்காலில் பாப்ஸ்கோ என்கிற அரசு நிறுவனம் சார்பில் தீபாவளி பல்பொருள் சிறப்பு அங்காடி தொடங்குவது வழக்கம். தீபாவளிக்கு முன்பாக குறைந்த நாள்களே இது செயல்படும். சில நாள்களிலேயே பொருள்கள் வியாபாரமாகிவிடும். பொதுமக்கள் வரவேற்கக்கூடிய இந்த அங்காடியை தீபாவளிக்கு 15 நாள்களுக்கு முன்பே தொடங்க வேண்டும் என்ற காரைக்கால் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதில்லை.
ஆனால், இந்த கோரிக்கையை புதுச்சேரி பிராந்தியத்தில் நிகழாண்டு அரசு நிறைவேற்றியுள்ளது. புதுச்சேரியில் ஏ.எஃப்.டி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இந்த அங்காடியை முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்து, ரூ.15 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாக பெருமையுடன் கூறியுள்ளார்.
காரைக்கால் வரும்போதெல்லாம் புதுச்சேரி மாநில நலத்துறை அமைச்சர் கந்தசாமி, எந்தவொரு திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டாலும், அதே நாளில் காரைக்காலிலும் நடைமுறைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வருகிறார். அவரது துறையின் கீழ் உள்ள பாப்ஸ்கோ நிறுவனம் புதுச்சேரியில் அங்காடியை திறந்துவிட்டு, காரைக்காலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், காரைக்காலில் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பைக்கூட அரசு இதுவரை செய்யவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் இதுகுறித்து கவனத்தில் கொள்ளாதது வேதனையளிக்கிறது.பாப்ஸ்கோ அங்காடி திறப்பிலிருந்தே காரைக்காலை நாராயணசாமி தலைமையிலான அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com