காரைக்காலில் ஆண்டுதோறும் காவிரி புஷ்கரம் விழா நடத்தப்படும்: முதல்வர் வி. நாராயணசாமி

காரைக்காலில் அரசு சார்பில் ஆண்டுதோறும் காவிரி புஷ்கரம் விழா நடத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி கூறினார்.

காரைக்காலில் அரசு சார்பில் ஆண்டுதோறும் காவிரி புஷ்கரம் விழா நடத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்தன. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், விற்பனை விலை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்களுக்கு பெரும் சுமையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனால் லாரி, பேருந்து கட்டண உயர்வு, காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகின்றன. மத்திய அரசுக்கு எரிபொருள் மூலமாக மட்டும் ரூ. 2.42 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது. இதை நுகர்வோருக்கு பிரித்துத் தராமல் மக்களை பாஜக அரசு ஏமாற்றுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
புதுச்சேரியில் பட்ஜெட் மூலம் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இதன் நிலைப்பாடுகள் குறித்து அறியும் வகையில் அனைத்துத் துறைகளின் அரசு உயரதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் புதுச்சேரியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. மருத்துவம், கல்வி, சமூக நலம், தொழிற்சாலைகள் என பல துறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. பெரும்பாலான துறைகள் உரிய தொகையை செலவு செய்திருக்கிறது. பொதுப்பணித்துறையில் மட்டும் தொய்வு காணப்படுகிறது. இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் மழைக்காலத்துக்குள் கால்வாய், வடிகால், நீர்தேக்கங்களை தூர்வாரவும், சாலைகளை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.7,965 கோடி பட்ஜெட்டில் ரூ.2,700 கோடி செலவாகியுள்ளது. மீதத் தொகை முழுமையும் குறித்த காலத்துக்குள் செலவு செய்யும் வகையில், பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகையின்போது தொழிற்சாலைகள், வணிக நிறுவனத்தினரிடம் வசூலில் ஈடுபடக்கூடாது. இது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளதால், சுற்றுலாவினர் வருகை அதிகரித்துள்ளது.
காரைக்காலில் இந்து தர்மத்தை கடைப்பிடிப்போர் ஒற்றுமைக்காக அரசு காவிரி புஷ்கரம் என்ற திருவிழாவை நடத்தி வருகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 19-ஆம் தேதி நானும், அமைச்சர்களும் புஷ்கரத்தில் பங்கேற்கவுள்ளோம். இந்த திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் அரசு நடத்தும்.
காரைக்கால் அரசுத் துறைகளில் 50 சதவீத  உயரதிகாரிகள் பணியிடம் காலியாக இருக்கிறது. இவற்றை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு ரூ.75 லட்சம் வரை திட்ட அனுமதி தரும் வகையில் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு புதுச்சேரியிலிருந்து 14 செவிலியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஒரு வார காலத்துக்குள் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.
காரைக்கால் மருத்துவமனைக்கு ஜிப்மர் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பது தொடர்பாக ஜிப்மர் இயக்குநரிடம் பேசியுள்ளோம்.
மருத்துவத் துறையில் சர்வீஸ் பிளேஸ்மென்ட் முறையில் புதுச்சேரியில் பணி, காரைக்காலில் ஊதியம் என்று செயல்படுவோரை உடனடியாக பணி பிராந்தியத்துக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மத்தியில் 2019-ஆம் ஆண்டு ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைவது உறுதி.  அதற்கேற்ப ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்க வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் சில நிர்வாக இடையூறுகள் உள்ளது. அதையும் மீறி திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றார் நாராயணசாமி.
அப்போது, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ. பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com