குடிநீர் குழாயில் அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த  மோட்டார்கள் பறிமுதல்

காரைக்கால் அருகே அனுமதியின்றி மோட்டார் மூலமாக குடிநீர் குழாய்களிலிருந்து நீர் எடுத்ததாக 9 மோட்டார்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்கால் அருகே அனுமதியின்றி மோட்டார் மூலமாக குடிநீர் குழாய்களிலிருந்து நீர் எடுத்ததாக 9 மோட்டார்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் குழாய்  மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் காலை, மதியம், மாலை என்று மூன்று வேலைகளாகப் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.   ஒரு சிலர் மட்டும் விநியோகிக்கப்படும் குடிநீரை மோட்டார் வைத்து   வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில்  நிரப்புகின்றனர். இதனால் மற்ற பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில்
பல்வேறு புகார்களும் கொம்யூன் பஞ்சாயத்து கமிஷலினரிடம் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து   திங்கள்கிழமை  காலை கொம்யூன் பஞ்சாயத்து  கமிலிஷனர் ராஜேந்திரன் தலைமையில், இளநிலை பொறியாளர் செல்வராஜ் மற்றும் கொம்யூன் ஊழியர்கள் திருநள்ளாறு நளன் நகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குடியிருப்புகளில் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தது 
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 9 மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கமிலிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்புகளில் ஒரு
சிலர் மோட்டார் வைத்து குடிநீரை எடுத்து வருவதாகக் கிடைத்த புகாரையடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 9 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோட்டார்களுக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒரு மாத காலத்திற்குள் அபராதத்தொகையை கட்டி மோட்டாரை வாங்கிக்கொள்ளவில்லை என்றால் பொது ஏலம் விடப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் குடிநீர் வரி பாக்கியும் வசூல் செய்யப்படும். எனவே,  குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், நீர் வீணாவதை தடுக்கவும் கொம்யூன் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோல் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com