பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்: திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் 

பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை  எடுக்க  வேண்டும் என  காரைக்கால் திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தார். 

பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை  எடுக்க  வேண்டும் என  காரைக்கால் திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்காலுக்கு அண்மையில் வந்த புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, திருநள்ளாறு பகுதியில் ஏழைகளுக்கு மனைப்பட்டா தருவதற்கான நிலத்தைப் பார்வையிட்டு, புறம்போக்கு நிலத்தைக் கண்டறியுமாறும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தேவையான மதிப்பீட்டைத் தயார் செய்து தனக்கு அனுப்புமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது என்றாலும், காரைக்காலில் இதற்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் மனைப்பட்டா கொடுத்தவர்கள் நிலையையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
காரைக்கால் நகரத்தையொட்டியப் பகுதிகள், நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மனைப்பட்டா என்கிற தாள் மட்டுமே தரப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிலத்தை இதுவரை கொடுக்கவில்லை. பட்டா உறுதிமொழித் தாளும், ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.20 ஆயிரமும்  வீடு கட்டத் தரப்பட்டது. நிலத்தை ஒப்படைத்தால் தானே வீடு கட்ட முடியும். இதனைச் செய்யாமல், புதிதாகப் பலருக்கு அடிப்படை வசதிகளையெல்லாம் செய்து மனைப்பட்டா தரப்படும் எனக் கூறுவது சரியானது அல்ல.
நான் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்த காலகட்டத்தில், கடந்த 2004-ஆம் ஆண்டில் காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் பகுதியில் 120 பேருக்கு மனை ஒதுக்க ஏற்பாடு செய்தேன். 
ஆனால் இப்போது ஆளும் அரசு எந்தவித  நடவடிக்கையும் எடுக்காததால், பட்டா தாள் வைத்திருப்போர் அரசின் நிதியுதவியுடன் வீடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர். காரைக்காலில் மட்டும் 710 பேர் மனை எங்கு இருக்கிறது எனத் தெரியாமல் பட்டா உறுதிமொழித் தாள் மட்டுமே வைத்திருக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளைக் களைந்துவிட்டு, புதிதாக மனைப்பட்டா தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாஜிம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com