வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி தொடக்கம்

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி மக்களுக்கும் தேர்தல் குறித்து விழிப்புணர்வுப் பெற, சமுதாய தேர்தல் பாடசாலை அமைக்கப்படுகிறது. 
இதை செயல்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் பயிற்றுவிப்பு நெறியாளராக அமர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், பயிற்சிப் பட்டறை காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரும், மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு அதிகாரியுமான சந்தனசாமி தலைமை வகித்தார். சமுதாய அளவிலான தேர்தல் பாடசாலையானது குடியாட்சி செம்மைக்கான சீரிய முயற்சியாக விளக்கும் எனவும், பயிற்சியில் பங்கேற்போர் அனைவரும் விளையாட்டு முறையில் தரப்படும் பயிற்சிகளை அறிந்துகொண்டு, பொதுமக்களுக்கும் இம்மாதிரியான விளக்கத்தை அளிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மாநில பயிற்சி நெறியாளர் பேராசிரியர் மோகன், மாவட்ட பயிற்சி நெறியாளர்கள் பேராசிரியர்கள் செந்தில்வேல், ராகவன், சந்திரசேகரன், மோகன் குமாரமங்கலம், ஞானமுருகன், பிரவீன் ஆகியோர் பங்கேற்று பயிற்சி பட்டறையில் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை கூறினர்.
வாக்காளர் பதிவுக்கான தகுதி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், அறநெறி வாக்களிப்பு போன்றவை விளையாட்டு முறையில் பயிற்றுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பயிற்சியாளர்கள் நிலைய அதிகாரிகளுக்கு உரையின் மூலமும், விளையாட்டு முறையிலும் பயிற்சியை தொடங்கினர்.
முதல் கட்டமாக நெடுங்காடு மற்றும் காரைக்கால் வடக்குத் தொகுதியைச்  சேர்ந்த வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் 64 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். பிற 3 தொகுதி வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு வரும் 18 மற்றும் 25 -ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com