இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: புதுச்சேரி மாநில பாஜக செயலர் தகவல்

போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை சிறையிலடைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள்

போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை சிறையிலடைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் எம். அருள்முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து காரைக்காலில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: மீன்பிடி படகில் ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், பொன்னுசாமி, தமிழ்மணி, பாக்கியராஜ், ஜெயசீலன், அருள் ஆகிய 6 பேரை கடந்த ஆண்டு ஏப். 1 -ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மீனவர்கள் 6 பேருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் வடக்கு மாகாணத்தின் ஜாஃப்னா உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.
நிபந்தனைகளின் அடிப்படையில்  இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவாதம் அளித்தால்தான் மீனவர்களை விடுதலை செய்ய முடியும்.  இதுகுறித்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மீனவப் பஞ்சாயத்தார் உள்ளிட்டோர் உரிய முயற்சிகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வி. சாமிநாதன் மூலம்  மத்திய உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மின்னஞ்சலில் கடிதம் அனுப்பி, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம்  மூலம் தேவையான நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை இந்தெந்த வகையில் அணுகுமாறு இந்திய வெளியுறவுத்துறை மூலம் புதுச்சேரி பாஜக தலைமையகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், இந்திய தூதரகத்தை அணுகி, மீனவர்கள் குறித்து அவர்கள் கேட்ட விவரங்கள் காரைக்காலிலிருந்து  அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது மீனவர்களை ஜாமீனில் வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்ட தகவல்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து எனக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் அருள்முருகன்.
அப்போது, காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com