மந்தகதியில் காரைக்கால் சந்தைத் திடல் சமன் செய்யும் பணி

காரைக்கால் வாரச் சந்தை நடைபெறக்கூடிய திடலை மேம்படுத்தும் பணி மந்தகதியில் நடைபெறுவதால்,

காரைக்கால் வாரச் சந்தை நடைபெறக்கூடிய திடலை மேம்படுத்தும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அதை விரைந்து நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என  பொதுமக்கள்
வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் முருகராம் நகர் அருகே நகராட்சிக்குச் சொந்தமான திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை நடைபெறுகிறது. ஏராளமான வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் இதில் பங்கேற்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கு வந்து பொருள்களை வாங்கிச்  செல்கின்றனர்.
பிரதான சாலைகளுக்கு மத்தியில் திடல் தாழ்வாக இருப்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திடலில் தண்ணீர் தேங்காத வகையில் மண் நிரப்புதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
பணிகள் முழுவீச்சில் நடைபெறாத நிலையில், அக்டோபர் மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையில் திடல் சகதியாக காட்சியளித்தது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் விரைவாக சீரமைப்பு  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் சந்தைத் திடலைப் பார்வையிட்டு, திடல் சமன் செய்யும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுக்குப் பின் நகராட்சி நிர்வாகத்தினரிடம் பணி ஒப்பந்தம் எடுத்தோர் செம்மண் கொட்டி சமன் செய்யும் பணியைத் தொடங்கினர். எனினும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
அண்மையில் பெய்த மழை மற்றும் புயலால் பணிகள் தொடர்ந்து செய்ய முடியவில்லை என காரணம் கூறப்பட்டது. தற்போது மழை ஓய்ந்திருக்கும் சூழலில், பணியை இன்னும் நிர்வாகத்தினர் தொடங்கவில்லை.
இதனால் வாரத்தில் ஒரு நாள் நடைபெறும் சந்தைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள், பொருள்களை லாரியில் கொண்டுவரும் வியாபாரிகள் என பலரும், சந்தை ஆங்காங்கே மேடு பள்ளங்களாகவும், சகதியாகவும் இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 9) சந்தையில் மக்கள் கடுமையான துன்பத்தை சந்தித்தனர். காரைக்கால் நகராட்சி நிர்வாகம், இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடித்து, சந்தைத் திடலை சீரான முறையில் சமன் செய்ய வேண்டும். பொதுமக்கள், வாகனங்கள் சென்றுவர ஏதுவாக சீரமைப்புப் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com