திருநள்ளாறு கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இரண்டரை ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி, கடந்த ஆண்டு டிச.19-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னிதிகொண்டுள்ள ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. இதில், நாடெங்குமிருந்தும் லட்சக்கணக்கானப் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, சனீஸ்வர பகவான் சன்னிதி மற்றும் கோயிலின் பிற பகுதிகள், நளன் குளம் அருகில் உள்ள ஸ்ரீ நளன் கலிதீர்த்த விநாயகர் கோயில் உள்பட சுமார் 15 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தன. சனிப் பெயர்ச்சி விழா நிறைவடைந்ததும், உண்டியல்களில் உள்ள காணிக்கைப் பொருள்கள் மூட்டைகளாகக் கட்டப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கோயில் நிர்வாக அலுவலர் ஏ. விக்ராந்த் ராஜா கூறியபடி, தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் அலுவலக கண்காணிப்பாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டக அறையிலிருந்து காணிக்கை மூட்டைகள் பிராகார மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, காணிக்கைப் பொருள்கள் எண்ணும் பணி தொடங்கியது.
இப்பணியில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் என சுமார் 50 பேர் ஈடுபட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டுகள், நாணயம் மற்றும் தங்கம், வெள்ளிபோன்ற பிற காணிக்கைப் பொருள்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. இந்த பணி புதன்கிழமை வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோயில் வெளிப்புறத்திலும், காணிக்கை எண்ணும் பகுதியிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காணிக்கை எண்ணும் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com