காரைக்கால் மின் துறையில் ஆன்லைன் சேவையை முறைப்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் மின் துறையில் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறையை செம்மைப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

காரைக்கால் மின் துறையில் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறையை செம்மைப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் வகையில் மின் துறை சார்பில், நேரடியாக ஊழியர்கள் சென்று மின் பயனீட்டுப் பட்டியல் அளிக்கும் முறை உள்ளது. மின் ஊழியர், நுகர்வோரின் பயன்பாட்டை அளவிட்டு யூனிட் முறையில் கட்டணம் தொகையிட்டு அளிக்கிறார். ஒவ்வொரு மாதமும் செலுத்தத் தவறினால், மறுமாதம் வரும்போது நிலுவைத் தொகையுடன் கடந்த மாதத்தின் தொகையும் சேர்த்து தரப்படுகிறது.  
இதுதவிர, ஆன்லைன் மூலமாகவும் மின் நுகர்வோர் கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தியதாக நுகர்வோருக்கு ஆதாரம் வந்துவிடுகிறது. ஆனால்,  மறுமாதம் மின் ஊழியர் பயனீட்டுப் பட்டியல் கொடுக்கச் செல்லும்போது நிலுவை காட்டுவதால், பொதுமக்கள் தவிப்படைய நேரிடுவதாக புகார் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் மின்துறை அலுவலகத்தில், ஆன்லைன் மூலம் செலுத்தும் தொகை, நுகர்வோர் குறித்த விவரங்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாமல் அலட்சியம் செய்யப்படுவதாலேயே, கட்டணம் செலுத்தியும் நிலுவை காட்டப்படுவதாக நுகர்வோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
ஆன்லைன் வசதி முறைப்படுத்தாததால், நுகர்வோர் பெரும்பான்மையினர் மின்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.
எனவே,  காரைக்கால் மின் துறையில், ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் கட்டணத்தை முறையாக பதிவு செய்யும் நிலையை துறையினர் செம்மைப்படுத்தவேண்டும்.
பல வீட்டில், குடும்பத் தலைவர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். மின் கட்டணத்தை அவர்கள் வெளியூரில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் செலுத்திவிடுகிறார்கள். ஆனால் மறுமாதம் நிலுவைத் தொகை குடும்பத்தினருக்கு காட்டப்படுகிறது. இதனால் குடும்பத்தினரும், வீடுகளுக்குச் செல்லும் மின்துறை ஊழியரும் குழப்பமடைய நேரிடுவதாக பலர் புகார் கூறுகின்றனர்.
ஆன்லைன் சேவை குறித்து பொதுமக்களுக்கு மின்துறை நிர்வாகம் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இந்த சேவையில் உள்ள குறைபாடுகள் களையப்படவேண்டும். பொதுமக்கள் பெரும்பான்மையினர் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், மின்துறை அலுவலகத்தில் கூட்டம் வெகுவாக கட்டுக்குள் வரும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் மின் துறை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com