ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா

காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிரவி பகுதியில் உள்ள இப்பள்ளி தாளாளர் கண்ணன் தேசிய இளைஞர் தின விழாவுக்கு தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் சட்டம், மேலாண்மைத் துறை பேராசிரியர் எஸ். கணபதி வெங்கடசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.
கல்வி மூலம் அறிவை மட்டுமல்ல, ஆளுமையையும் கொடுத்து ஒருவரைச் சிறந்த குடிமகனாக உருவாக்க வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது கொள்கையளவில் ஒவ்வொருவரும் சிரமேற்கொண்டு தமது செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளவேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மாணவர்களின் பங்களிப்பு முக்கியம் என அறிவுறுத்தினார் அவர். அதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கிடையே அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் 15 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இந்த போட்டிகள் 14 முதல் 17 வயதுக்குள்ளாக நடத்தப்பட்டது.
போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. கபடி போட்டியில் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், இமாக்குலேட் பள்ளி 2 -ஆவது பரிசும், கைப்பந்துப் போட்டியில் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி 2 -ஆம் பரிசும் பெற்றது.
கால்பந்துப் போட்டியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி முதல் பரிசும், தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளி 2 -ஆம் பரிசும் பெற்றது.
தொடர்ச்சியாக மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஓஎன்ஜிசி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஆஸ்லி, 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் காமேல், குண்டு எறிதலில் 3 -ஆம் இடம் பெற்ற மாணவி ரக்ஸிகா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் எட்வின் சாமுவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com