களைகட்டிய பொங்கல் சிறப்பு சந்தை

பொங்கல் பண்டிகையையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சந்தையில் திரளான மக்கள் குவிந்து,

பொங்கல் பண்டிகையையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சந்தையில் திரளான மக்கள் குவிந்து, பொங்கல் விழாவுக்கான பொருள்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்துகள், பானை உள்ளிட்ட பொங்கல் படையலுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதில் மக்கள் முனைப்புக் காட்டினர்.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முருகராம் நகர் அருகேயுள்ள நகராட்சித் திடலில் வாரச் சந்தை நடத்தப்படுகிறது. சுமார் 300 உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் இதில் கலந்துகொள்வர். கடந்த 7 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெற்றபோதிலும், பொங்கலுக்காக சிறப்பு சந்தை 13 -ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
வெளியூரிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மாலையே காய்கனி, கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்துகள், மண் சட்டி, பானை, அடுப்பு உள்ளிட்ட பொருள்களுடன் வரத் தொடங்கினர்.
சனிக்கிழமை காலை முதல் இரவு நெடுநேரம் வரை வியாபாரம் களை கட்டியது. பொங்கல் விழாவில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். சிறப்பு சந்தையில் வியாபாரிகள் அதிகமாக காணப்பட்டதால் போட்டி மிகுந்த வியாபாரமாக இருந்தது.
பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவை தொடர்ந்துள்ளதால், வழிபாட்டுக்குரிய பொருள்களை வாங்க மக்கள் குடும்பத்தினருடன் ஆர்வமாக சந்தைக்கு வந்திருந்தனர். பொருள்கள் அனைத்தும் புத்தம் புதிதாக இருந்ததால், வாங்கும்போது மகிழ்ச்சி ஏற்பட்டது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
சீர்காழி, தரங்கம்பாடி வட்டாரம், மயிலாடுதுறை, பேரளம் பகுதியிலிருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்துகள் கொண்டுவரப்பட்டிருந்தன. காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மண் பானை, சட்டி உள்ளிட்டவைக கொண்டுவரப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டன. பெரும்பாலும் பொங்கலுக்குத் தேவையான இந்த வகைகளும், வாழைப்பழம், வாழை இலை, தேங்காய் மற்றும் மாட்டுப் பொங்கல் பயன்பாட்டுக்கான நெட்டி மாலைகளும், காணும் பொங்கலில் சிறுவர்கள், இளைஞர்கள் கொண்டாட்டத்துக்குரிய வண்ணப் பட்டங்கள் உள்ளிட்டவை அதிகமாக விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.
சந்தையாக இருந்த போதிலும், தேங்காய் தலா ரூ. 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டது. பூவன் வாழைப்பழம் தலா ரூ. 5 -க்கு விற்பனை செய்யப்பட்டன. கரும்பு ஒன்று ரூ. 25 முதல் 30 வரையிலும், இஞ்சி, மஞ்சள் கொத்துகள் ரூ. 20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. பானை, சட்டி, அடுப்புகளும் ரூ. 50 முதல் 150 வரையில் விற்பனை செய்யப்பட்டன.
சிறிய வெங்காயம் கிலோ ரூ. 80, பல்லாரி வெங்காயம், ரூ. 35 மற்றும் ரூ. 40 அளவிலும், தக்காளி கிலோ ரூ. 15 விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. கரும்பு மட்டுமே அதிகமாக சந்தையிலும், காரைக்காலில் பிற பகுதியிலும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வார சந்தையைக் காட்டிலும் சிறப்பு சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனர். நகரக் காவல்நிலைய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் சிறப்பு சந்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com