மாணவர் நிலையை மேம்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டிருக்கும் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் என்ற திட்டத்தில், அவர்களது நிலையை உயர்த்தும்

கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டிருக்கும் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் என்ற திட்டத்தில், அவர்களது நிலையை உயர்த்தும் பணியில் ஆசிரியர்கள் சிறப்பு கவனம்  செலுத்த வேண்டும் என அமைச்சர் ஆர். கமலக்கண்ணண் கூறினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி சேத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்று பார்வையிட்ட அவர், ஆசிரியர்களை வரவழைத்து அவர்களிடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மாணவர்களுக்கு தயார்படுத்தப்பட்ட மதிய உணவுகளை அமைச்சர் சாப்பிட்டு, சுவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வு குறித்து அமைச்சர் கூறியது : சேத்தூர் அரசுப் பள்ளி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 84 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளியில் மாணவர்கள் கல்வித்திறன் மேம்படவும், வருமாண்டு அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யவும் ஆசிரியர்கள் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரீ பிரைமரி என்கிற பால்வாடி வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லை, உதவியாளர் இல்லை என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரிடம், அரசு பணி நியமனம் செய்யப்படும் வரை தற்காலிக முறையில் இவர்களை நியமித்து ஊதியம் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். பள்ளியில் சுற்றுச்சுவர் வேண்டும் என கோரினர். அரசு இதற்கான நிதி ஒதுக்கி விரைவில் கட்டுமானம் செய்யும். 
சேத்தூர் பள்ளியில் மதிய உணவை பரிசோதித்தபோது சுவையாக இருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தேன். பள்ளிக்கு வந்த மளிகைப் பொருள்களை ஆய்வு செய்தபோது, மிளகாய் சுவை மாறியிருப்பதை உணர்ந்தேன். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரை அழைத்துப் பேச
திட்டமிட்டுள்ளேன்.
ஒரு  ஆசிரியருக்கு 20 மாணவர்கள் வீதம் என்ற திட்டத்தை கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அந்த ஆசிரியர், தமது கட்டுப்பாட்டில் உள்ள 20 மாணவர்களின் கல்வி நிலை, குடும்பச் சூழல்,  உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த கவனத்தின் மூலம் மாணவர்களது கல்வித்தரம் மேம்படும் என அரசு நினைக்கிறது. இதை அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் பங்கெடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
மாணவர்கள் மீது ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையில் குறைவு சொல்ல முடியாது. மேலும், இதை சிறக்கச் செய்ய வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.
ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோரை அழைத்து அடிக்கடி கூட்டம் நடத்த வேண்டும். முக்கியமான கூட்டங்களுக்கு துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும் தெரிவித்தால் நாங்களும் பங்கேற்போம் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி வருகிறேன்.
நாட்டில் 7 மாநிலங்களில் பெங்களூருவை சேர்ந்த அட்சியபாத்திரா என்கிற தன்னார்வ நிறுவனம், பள்ளியில் மதிய உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. புதுச்சேரியில் அடுத்த  சில மாதங்களில் மதிய உணவில் சில மாற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு நவீன சமையலறை தேவை என்பாதல் அதற்கான அமைப்பு புதுச்சேரியில் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு காரைக்காலில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அமைச்சர்.
ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி, வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com