அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை நிறைவேற்றம் தொடர்பாக அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, உள்ளாட்சி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை நிறைவேற்றம் தொடர்பாக அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, உள்ளாட்சி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சார்பில், பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். 
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த உள்ளாட்சி ஊழியர் சம்மேளன நிர்வாகிகளிடம், புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம்,  ஜனவரி 2018 மாத இறுதிக்குள் உள்ளாட்சி ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைளை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு விடுகிறோம் என எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
  உள்ளாட்சி ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தாமல் வஞ்சிக்கப்பட்டு வரும்  நிலையில், 6 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி கடந்த 1.7.2016 முதல் 4 தவணைகளில் வழங்க வேண்டிய பஞ்சப்படிகளை ஒரே தவணையாக வழங்க வேண்டும்.
  கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கெளரவத் தலைவர்கள்  ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர்  சுப்ரமணியன், பொதுச் செயலாளர்  ஷேக் அலாவுதீன் ஆகியோர்  கண்டன உரையாற்றினர். 
ஆர்ப்பாட்டத்தில்  பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்க பொறுப்பாளர் சுப்புராஜ், தீயணைப்புத்துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வராஜ், உள்ளிட்ட பல்வேறு துறை சங்க நிர்வாகத்தினர்  ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன துணைத் தலைவர்கள் ஜோதிபாசு, உலகநாதன், நாகப்பன், துணைச் செயலாளர் திவ்யநாதன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  துணைச் செயலர் சண்முகராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com