கிடப்பில் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையை  அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி  கிடப்பில் போடப்பட்டு விட்டதாகப்  புகார் கூறப்படுகிறது.  

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையை  அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி  கிடப்பில் போடப்பட்டு விட்டதாகப்  புகார் கூறப்படுகிறது.  
காரைக்கால் மாவட்டத்தில் பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தற்போதைய நிலையிலிருந்து இருபுறமும் தலா 1.5 மீட்டர் வீதம் அகலப்படுத்தி மேம்படுத்த கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ரூ.10 கோடியில் திட்டப்பணி தொடங்கப்பட்டது.
இதில் காரைக்காலின் வடக்கே  காரைக்கால் நகரம் முதல் பூவம் வரை சுமார் 10 கி.மீ. தூரத்தில் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே சாலைப்பணி நிறைவுபெற்றுள்ளது. தெற்கே திருமலைராஜனாறு பாலம் முதல் ஓ.என்.ஜி.சி. வரையிலான 2  கி.மீட்டர் தூரம் மட்டுமே பணிகள் நிறைவுபெற்றுள்ளது. ஓ.என்.ஜி.சி. முதல் அரசலாறு பாலம் வரை சுமார் 3 கி.மீட்டர் தூரத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கிய சில நாட்களில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 
இதுகுறித்து காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலர் ஜெ.சிவகணேஷ் வெள்ளிக்கிழமை கூறும்போது, அரசலாறு பாலம் முதல் ஓ.என்.ஜி.சி. வாயில் வரை சாலைப் பணி மேம்படுத்தவேண்டியுள்ளது. இந்தப்  பகுதியை  மேம்படுத்தாததால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன.  வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.    கோடை விடுமுறை காலத்திலேயே  சாலைப் பணியை முடிக்காமல் அலட்சியப்படுத்தியதால் மாணவர்களும், பெற்றோர்களுமே அவதியுற வேண்டியிருக்கிறது என்றார்.
மின்துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால் கூறும்போது,  மின்சாரத்தை ஒரு நாள் நிறுத்திவிட்டு மின்கம்பங்களை மாற்றும் பணியை செய்தால் நேதாஜி நகர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர். தொடர்ந்து நிறுத்த முடியாது. அடுத்த வாரத்தில் 2 நாளும், அதன் பின்வரும் வாரத்தில் 2 நாளும் என நிறுத்துவோம். 
அந்த வேளையில் பொதுப்பணித்துறையினர்  பணிகளைச் செய்யலாம் என்றார். 
எம்.எல்.ஏ.க்கள் மௌனம்: பாதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை உள்ள பகுதி 2 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியை உள்ளடக்கியது. நிரவி-திருப்பட்டினம் தொகுதி, காரைக்கால் தெற்குத் தொகுதி. இவ்விரு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் மக்கள் படும் துயரத்தைக் கண்டும்காணாமல் இருப்பதாக புகார் கூறப்படுகிறது.
சாலை விபத்துகள் இந்தப் பகுதியில் அதிகரிப்பதால், இதனை தடுக்கும் நோக்கில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், பொதுப்பணித்துறை, மின்துறை அலுவலர்களை அழைத்துப் பேசவேண்டும் என ஒருசாரார் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com