திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசெண்பக

திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசெண்பக தியாகராஜசுவாமி, ஸ்ரீநீலோத்பாலாம்பாள் வீற்றிருந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
திருநள்ளாறில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் அம்பாள் ஸ்ரீபிரணாம்பிகையாகவும் மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேசுவரராகவும் அருள்பாலிக்கின்றனர். நளச் சக்கரவர்த்தி தோஷம் விலக இக்கோயிலில் ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை வழிபட்டு பயன்பெற்றதால் இக்கோயிலில் மூலவர் சிறப்பு பெறுகிறார். சனீஸ்வரபகவான் தனி சன்னிதிகொண்டு அனுகிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தல விருட்சம் தர்ப்பையாகும். ஸ்ரீதர்பாரண்யேசுவரர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடெங்குமிலிருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோத்ஸவ விழா மே 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும்  சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 6 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.  
வலம் வந்த 5 தேர்கள் : பெரிய தேரில் ஸ்ரீசெண்பக தியாகராஜ சுவாமியும், சிறிய தேரில் ஸ்ரீநீலோத்பாலாம்பாளும் வீற்றிருந்தனர். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீற்றிருந்தனர். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீசெண்பக தியாகராஜ சுவாமி, ஸ்ரீநீலோத்பாலாம்பாள், ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர்கள் என வரிசைப்படி இழுக்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம் ஆகியவை நடத்தப்பட்டு தேரில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், சுவாமி, அம்பாள் ஆகிய சுவாமிகளுக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தி தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று 5 தேர்களை இழுத்துச் சென்றனர். கோயிலுக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகள் வழியே தேர் இழுத்துச் செல்லப்பட்டு மாலை தேரடிக்கு வந்தடைந்தது. 
விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆர். ஆர். கேசவன்,  சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த்ராஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான சிங்காரவேலு மற்றும் உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தேரோட்டத்தையொட்டி, ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் பாக்கெட், உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தேர் இழுத்துவரும் பக்தர்களுக்கு வசதியாக வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது.  இரவு தேரிலிருந்து ஸ்ரீசெண்பக தியாகராஜசுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். 
தேரோட்டம் குறித்து சிவாச்சாரியார் கூறியது: தியாகராஜர் உன்மத்த நடனமாடும் திருநள்ளாறு கோயில் தேரோட்டத்தில், 5 தேரையும் ஒருசேர பக்தர்கள் காண்பது சிறந்த பயனைத்தரும். அனுகிரஹ மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானையும் இந்நாளில் தரிசிக்கும்போது கூடுதல் சிறப்பை பக்தர்கள் பெறுகிறார்கள். இதன்பேரிலேயே திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்றார்.
தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் : சனிக்கிழமை (மே 26) இரவு 11 மணியளவில் தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார். மே 27-ஆம் தேதி தெப்போத்ஸவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com