திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி, பிப்ரவரி மாத வாக்கில்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி, பிப்ரவரி மாத வாக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில்  பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயில் உள்ளது.  ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டு  அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் இக்கோயில், நவகிரக தலங்களில் சனி பகவானுக்குரிய தலமாக 
விளங்குகிறது.
இக்கோயிலில் 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும் இக்கோயிலுக்கு சார்புக் கோயில்களாக விளங்கும்  ஸ்ரீ ஆனந்த விநாயகர் மற்றும் 4 வீதிகளிலும் அமைந்துள்ள விநாயகர்கள்,  நளன் குளம் அருகே உள்ள ஸ்ரீ நளன் கலித் தீர்த்த விநாயகர், சுரக்குடி ஐயனார் கோயில், ரயில்வே பகுதியில் ஸ்ரீ பிடாரியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 9  கோயில்களுக்கு 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
தற்போது, குடமுழுக்கு நடத்தி 12 ஆண்டுகள் நிறைவானதையொட்டி மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் பாலஸ்தாபன பூஜை நடத்தப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 
ஏறக்குறைய ரூ.1 கோடி திட்ட மதிப்பில், கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் புதுப்பித்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. வரும் தை மாதத்தில் குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, கோயிலின் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளிட்ட பிற கோபுரங்கள், பரிவார சன்னிதிகளின் விமானங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் புதுப்பிக்கப்படும் பணி தீவிரமாக நடந்துவருகின்றன. கோயில் உள்புறத்தில் காங்கிரீட் தூண்களில் ஆன்மிக தோற்றத்துடன் வேலைப்பாடுகள் செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன.
குடமுழுக்கு செய்வதற்கான தேதியை முடிவு செய்து, புதுச்சேரி முதல்வர் மூலம் அறிவிப்பு செய்ய அனுப்பியிருப்பதாக கோயில் நிர்வாக அலுவலர் ஏ.விக்ரந்த் ராஜா அண்மையில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியது: 
வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. சார்புக் கோயில்கள், தர்பாரண்யேசுவரர் கோயில் இடையே 15 நாள்கள் வித்தியாசம் வைத்து தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கினாலும் கோயிலுக்குள் திருப்பணிகள் தடையின்றி நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில கோபுரங்களில் வண்ணம் பூசும் பணிகளும் நடந்துவருகின்றன. சார்புக் கோயில்களில் வண்ணம் பூசும் பணிகள் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் நிறைவடைந்துவிடும்.
சார்புக் கோயில்கள், தர்பாரண்யேசுவரர் கோயில்கள் என தனித்தனி ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், பணிகள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டுவிடும் என தெரிவித்தனர்.
தீர்த்தக் குளங்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல் : கோயிலுக்கு அருகாமையில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தினரால் படிக்கட்டுகள் கட்டுமானம் நடைபெறுகிறது. கோயிலுக்கு வடக்குப் புறத்தில் அகத்தீசுவரர் தீர்த்தக் குளம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, முடங்கியுள்ளது. கோயிலுக்கு அருகே எமன் தீர்த்தக் குளம் பல்வேறு அமைப்புகளுடன் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்குக் காலத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com