பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை எதிர்த்து நிலம் கொடா இயக்கம்: விவசாயிகள் சங்கங்கள் முடிவு

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் நிலம் கொடா இயக்கம் தொடங்குவோம் என, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முடிவு

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் நிலம் கொடா இயக்கம் தொடங்குவோம் என, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது.
காவிரியை மீட்போம், மண்ணைக் காப்போம் என்ற முழக்கத்துடன் காவிரி டெல்டா விவசாயிகள் சந்திப்பு விழிப்புணர்வு பிரசார பயணம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இப்பிரசார பயணம், சீர்காழி வட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாதானம், பழையபாளையம், திருமுல்லைவாசல், அகரவட்டாரம், வெட்டங்குடி, ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட 18 கிராமங்களில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியிக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்து, பேசியது:
பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தின் மூலம் கச்சாஎண்ணெய், ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு போன்ற எந்த வளங்களையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம். காவிரி டெல்டா பகுதி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நெற்களஞ்சியமாக திகழக்கூடியதாகும். வரிகொடா இயக்கம் போல் கிராமங்கள் தோறும் இத்திட்டத்துக்கு நிலம் கொடா இயக்கம் தொடங்க உள்ளோம். சுதந்திரத் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் பெருமளவு கலந்துகொண்டு பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு நிலம் அளிக்கமாட்டோம் என்பதை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம், செயலாளர் விஸ்வநாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க சீர்காழி பொறுப்பாளர்கள் வைத்தியநாதன், இராமானுஜம், வாகீசன், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆக. 29-இல் முழு கடையடைப்பு போராட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கக் கோரி தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆக. 29-ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்பி.ஆர். பாண்டியன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், சீர்காழியில் சனிக்கிழமை நிருபர்களிடம் மேலும் கூறியது: பயிர் காப்பீடுத் திட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் குளறுபடி நிலவுகிறது. ஆகையால், தமிழக அரசு வேளாண் துணை செயலாளர் தலைமையில் குழு அமைத்து, பயிர்க் காப்பீடு ஒதுக்கீடு செய்ததை ஆய்வு செய்யவேண்டும். உரிய பயனாளிகளுக்கு, இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து, கொள்ளிடத்தில் அளித்த பேட்டியில், பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை கைவிடக்கோரியும், டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆக. 29-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com