மயிலாடுதுறை புனுகீசுவரர் கோயில் குடமுழுக்கு

நாகை  மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள அருள்மிகு சாந்தநாயகி உடனுறை  புனுகீசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை  மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள அருள்மிகு சாந்தநாயகி உடனுறை  புனுகீசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையை மையமாகக் கொண்ட சப்த சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயிலில் நடைபெற்றுவந்த புனரமைப்புப் பணிகள் நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 10-ஆம் தேதி  அனுக்ஞை,  விக்னேஸ்வர பூஜை, தன பூஜைகளுடன்  குடமுழுக்கு விழா நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடை
பெற்றன.
குடமுழுக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை  6-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுக்குப் பின்னர்  காலை 8- மணியளவில் புனித நீர் நிரம்பிய கடம் புறப்பாடு  நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து,  கோயிலின் ராஜகோபுரம், மூலவர் விமானம், பரிவார தெய்வங்களின் சன்னிதி விமான கலசங்களுக்கு காலை 10- மணிக்கு மேல் குடமுழுக்கு நடைபெற்றது.
மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவகாம  பாடசாலை நிறுவனர் மற்றும் முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் குடமுழுக்கு  
நடத்தினர்.
மயிலாடுதுறை  உட்கோட்ட  காவல் துணைக் காண்காணிப்பாளர் பி. கலிதீர்த்தன் மேற்பார்வையில்  50-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழாவுக்கான  ஏற்பாடுகளை கோயிலின் அறங்காவலர் கே. வெங்கு, திருப்பணிக் குழுத் தலைவர் கே. ரெங்கராஜன், நிர்வாக அலுவலர் எம்.எஸ். பி. ராஜசேகரன், அருள்மிகு புனுகீசுவரர் சிவனடியார் திருக்கூட்டத்தின் தலைவர்  சு.தெட்சணாமூர்த்தி மற்றும் திருப்பணிக் குழு நிர்வாகிகள், சாலியர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.
முன்னதாக,  சனிக்கிழமை  இரவு நடைபெற்ற 5-ஆம் கால யாக பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய  சுவாமிகள், தருமையாதீனம் 26-ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம்  சீர்வளர்சீர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com