ஆற்றுக்குள் லாரி நிறுத்தகம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

வேதாரண்யம் அருகே வடிகால் ஆற்றைத் தூர்த்து  லாரிகள் நிறுத்தகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் அருகே வடிகால் ஆற்றைத் தூர்த்து  லாரிகள் நிறுத்தகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடலில் இணையும் முக்கிய வடிகாலான மானங்கொண்டான் ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதனூர் ஊராட்சி அண்டர்காடு, கருப்பம்புலம்  பகுதியில் சாலையையொட்டி இந்த ஆற்றுக்குள் சுமார் 80 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளத்தில் லாரிகள் நிறுத்தகம் அமைக்க கடந்த மாதத்தில்  முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், ஜூலை 5-ஆம் தேதி இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்களை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டதால், லாரி நிறுத்தகம் அமைக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக, ஜூலை11-ஆம் தேதி கோட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக்  கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.
 இந்த நிலையில், லாரிகள் நிறுத்தகம் அமைக்க ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்ணைக்கொட்டி  திட்டு உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள், சமூக ஆர்வலர் எம். ரெங்கராஜன் தலைமையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள்  ஊராட்சித் தலைவர் மனோகரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் தங்கராசு ,பெண்கள் உள்ளிட்ட  ஏராளமானவர்கள் மறியலில் பங்கேற்று, தூர்க்கப்பட்ட மண்ணை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தினர்.
 தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்  மாதவன்  உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, ஆற்றைத் தூர்த்து லாரி நிறுத்தகம் அமைக்க அனுமதிக்கமாட்டோம்  என உறுதியளிக்கப்பட்டது.  இதையடுத்து, போராட்டத்தை தாற்காலிகமாக  ஒத்திவைப்பதாகவும், ஆற்றைத்தூர்க்கும் பணி மீண்டும் நடந்தால் மறியல்  போராட்டம் நடத்தப்படும் எனவும் கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 இந்த மறியலால் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com