ரூ. 263 கோடி  இழப்பீடு பெற்றுத் தந்த  நாகை மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டு: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேசிய வேளாண் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்திலேயே மிக அதிகளவாக நாகை மாவட்டத்துக்கு ரூ. 263 கோடி இழப்பீடு கிடைக்க

தேசிய வேளாண் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்திலேயே மிக அதிகளவாக நாகை மாவட்டத்துக்கு ரூ. 263 கோடி இழப்பீடு கிடைக்க வழிவகை செய்த நாகை மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன், வேளாண் இணை இயக்குநர் சேகர், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் கா. ஜெயம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
வி. தனபாலன்: நாகை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளைக் கொண்டு தொடங்கப்பட்டு, 5 பணிகள் நிறைவுப் பெற்றுள்ளதாக பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் பணிகள் குறித்து எந்த விவசாயிகளுக்கும், பாசனதாரர்கள் சபைக்கும் எவ்வித தகவலும் இல்லை. இது, அரசின் நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது.
நாகை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி தேவையில் 16 சதவீதத்துக்கான விதையை வேளாண் துறை வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், பருத்தி சாகுபடிக்கு நாகை மாவட்டத்தில் ஒரு கிலோ விதை கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல, ஊக்குவிப்பு மானியம் குறித்தும் எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து வேளாண் துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
எஸ். சம்பந்தம் : குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டப் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. நாகை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராத்துப் பணிகள், நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுப் பணித் துறை பட்டியல் வெளியிட்டு காட்சிப்படுத்த வேண்டும்.
ஆர். கோதண்டராமன்: சீர்காழியில் 1962-ஆம் ஆண்டு முதல் வேளாண் விற்பனைக் குழு வாடகை கட்டடத்திலேயே இயங்கி வந்தது. அண்மைக்காலமாக அந்தக் கட்டடம் பூட்டப்பட்டு விட்டது. எனவே, வேளாண் விற்பனைக் குழுவுக்கு சீர்காழி வட்டம், எருக்கூரில் உள்ள வருவாய்த் துறை இடத்தில் நிரந்தரக் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி. சரபோஜி: நாகை மாவட்டத்தில் கடும் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் கடன் கணக்கில் வரவு வைக்காமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோ. சிவஞானம் : உம்பளச்சேரி அடப்பாற்றில் மேலும் ஒரு புதிய ஷட்டர் அமைக்க வேண்டும். கரியாப்பட்டினம் பாசன வாய்க்கால் மற்றும் செட்டிப்புலம் பாசன வாய்க்கால்களைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
ஆட்சியருக்குப் பாராட்டு
தேசிய வேளாண் பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 403.79 கோடி இழப்பீடுத் தொகையில், நாகை மாவட்டத்துக்கு ரூ. 263.50 கோடியைப்  பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு, விவசாயிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் பெரும்பாலானோர் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
சலசலப்பு...
மாவட்ட நிர்வாகத்தைப் பாராட்டி விவசாயிகள் பேசிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து பேசிய விவசாயி அகோர மூர்த்தி என்பவர், இது விவசாயிகள் குறைதீர் கூட்டமா? அல்லது பாராட்டுக் கூட்டமா? என்றார். இதைக் கண்டித்து விவசாயிகள் பலரும் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவையில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.
பயிர்க் காப்பீடு அறிவிப்பு...
மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி பேசுகையில், நிகழ் காரீப் பருவத்துக்குப் பயிர்க் காப்பீட்டுக்கான அறிவிப்பாணை பெறப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் இக்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரத்தில் 2 சதவீதத் தொகையை பிரிமியமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். குறித்த காலத்துக்குள் விவசாயிகள் பிரிமியம் செலுத்தி பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் இணைந்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com