தலைஞாயிறு: மழை பாதிப்பால் மாணவர்களுக்கு தொடரும் அவதி

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு நிலைகளில் அவதியுறும் நிலை தொடர்கிறது.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு நிலைகளில் அவதியுறும் நிலை தொடர்கிறது.
தலைஞாயிறு பகுதியில்  பெய்த கனமழையால் பழையாற்றங்கரை, வண்டல், குண்டூரான்வெளி ஆகிய கிராமங்களில் 15 நாள்களுக்கும் மேலாக வெள்ளம் வடியாமல் உள்ளதால், அங்குள்ளவர்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீரடையவில்லை. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் நிலையோ பரிதவிப்பாக உள்ளது.
பழையாற்றங்கரையில் இருந்து டிராக்டர் மூலம் பிரதான சாலைக்கு வரும் மாணவர்கள் பேருந்தில், தலைஞாயிறு, மணக்குடி அரசுப் பள்ளிகளை சென்றடைந்து திரும்புகின்றனர். பழையாற்றங்கரையில் இயங்கும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  மழை நீர் தேங்கியுள்ளதால்,  அருகில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில்  மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பள்ளி நடத்துவதற்கு ஏதுவான சூழல் உள்ளனவா என்பது குறித்து கல்வித் துறையினர் ஆய்வு செய்யவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
படகில் பயணம்...
வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள வண்டல், குண்டூரான்வெளி  கிராமங்களில் உள்ள 120 மாணவர்கள் தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் படகில் பயணித்து, பின்னர் நடந்தே பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர். இதேபோல், இக்கிராமங்களிலிருந்து வேதாரண்யம் ஒன்றியப் பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் நல்லாறு, அடப்பாற்றில் ஓடும் தண்ணீரை படகில் கடந்து சென்று திரும்புகின்றனர்.
இதனிடையே வண்டல், குண்டூரான்வெளி கிராமங்களில் உள்ள ஒன்றியப் பள்ளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஈரத்தன்மை குறையாததால் அவதியுற நேரிடுவதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக இடர்பாடு காலத்தில் ஆசிரியர்களே கிராமங்களுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முகாம் பள்ளிகளை திறக்கவேண்டும் என கிராம மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கெனவே, பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறைவோடு வாழ்ந்து வந்த மாணவர்கள், தற்போது மழைப் பாதிப்பால் பல்வேறு நிலைகளில் அவதியுறுவதோடு, கவனச் சிதறல், மன உளச்சலுக்குள்ளாகி வருவது நடுநிலையாளர்களை வேதனையடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com