கழுமலை ஆற்றை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

சீர்காழி கழுமலை ஆற்றை தூர்வாரவும்,  குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சீர்காழி கழுமலை ஆற்றை தூர்வாரவும்,  குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்குவது சீர்காழி வட்டம். கடந்த பல ஆண்டுகளில்,  மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் பெரும்பாலும் சீர்காழியை வந்தடைவதில்லை எனக் கூறும் விவசாயிகள், இதற்கு காரணம் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரப்படாததுதான் என குற்றம் சாட்டுகின்றனர்.
சீர்காழி வட்டப் பகுதியில் உள்ள முக்கிய பாசன ஆறுகளில் கழுமலை ஆறும் ஒன்று.  இந்த ஆறு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாகவும்,  25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசனத்துக்கு ஆதாரமாகவும் உள்ளது.  
கழுமலை ஆறு கொண்டல் கிராமம் தலைப்பிலிருந்து வள்ளுவக்குடி, நிம்மேலி, அகணி, தாடாளன்கோவில், சீர்காழி, திட்டை மற்றும் தில்லைவிடங்கன் வரை செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து 20-க்கும் மேற்பட்ட பாசனக் கிளை வாய்க்கால்கள் பிரிகின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்ட குளங்களுக்கும்  நீராதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கழுமலை ஆறு தூர்வாரப்படாததாலும், முறையாக பாசன நீர் வராததாலும் இந்த ஆற்றில் முட்புதர்களும், மரங்களும் மண்டிக் கிடக்கின்றன. மேலும், ஆங்காங்கே குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கழுமலை ஆற்றின் கடைமடை பகுதி வரை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கழுமலை ஆற்றை கொண்டல் தலைப்பிலிருந்து திருத்தோணிபுரம் வரை முழுமையாக தூர்வாரவும், குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் பொதுப்பணித் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com