சீர்காழி பகுதியில் பூத்துக் குலுங்கும் சாமந்தி பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி பகுதி கொள்ளிடம் ஆற்றுப் படுகை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கியுள்ளது 

சீர்காழி பகுதி கொள்ளிடம் ஆற்றுப் படுகை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கியுள்ளது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.  இப்பூக்களை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், நல்லூர், நல்லநாயகபுரம் உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையோரக் கிராமங்களில் சுமார் 100 ஹெக்டரில் சாமந்தி மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள சூளகிரி பகுதியிலிருந்து சாமந்தி பூ நாற்றுகள் ஒன்றுக்கு ரூ. 2 விலை கொடுத்து வாங்கி, ஏக்கருக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நட்டு சாகுபடி செய்துள்ளனர். 
இதுகுறித்து, தண்டேசநல்லூர் விவசாயி விக்னேஷ் கூறியது:
வாரம் ஒரு முறை பயிருக்கு தேவையான மருந்துகள் தெளித்து நல்ல விளைச்சல் வந்தால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை எளிதாக கிடைக்கிறது. அதிக தண்ணீர் தேவைப்படுவதால்,  தண்ணீர் இறைக்க டீசல் என்ஜினைப் பயன்படுத்தி, சாமந்தி மலர்கள் சாகுபடி செய்கிறோம். அறுவடை செய்யப்படும் சாமந்தி மலர்கள் கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரையில் சீர்காழி, சிதம்பரம், கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.  மல்லிகை, அரும்பு, ரோஜா ஆகிய மலர்கள் அதிக விலைக்கு விற்பதால் பொதுமக்கள்  விசேஷ நாள்களில் வாங்குவதற்கு தயங்குகின்றனர். சாமந்தி  மலர்கள் விலை குறைவாகவும், நல்ல வண்ணமாகவும்  இருப்பதால்  பூக் கடை வியாபாரிகள் சாமந்தி  மலர்களை அதிகளவு வாங்கி விற்பனை செய்ய முனைப்புக் காட்டுகின்றனர். இதனால், சாமந்தி மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும் சாமந்தி பூ விதைகள் ஒசூருக்கு சென்று வாங்கி வரவேண்டியுள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால், அரசு சாமந்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்துறை சார்பில் சாமந்தி விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com