"போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்'

பட்டம் பெறும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். 

பட்டம் பெறும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். 
நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 3- ஆவது பட்டமளிப்பு விழாவில், 392 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி மேலும் அவர் பேசியது: நாகப்பட்டினத்தில்  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியானது 2012 பிப். 12-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஆகஸ்ட்  மாதம் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தை சுற்றியுள்ளவர்கள் உயர்கல்வி பயில பொறையாறு, மயிலாடுதுறை, பூம்புகார், திருவாரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்த நிலை தற்போது மாறியுள்ளது. இளங்கலை வகுப்புகள் மற்றும் 300 மாணவ,  மாணவியருடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, தற்போது 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் பல்வேறு பாடப் பிரிவுகளுடன் நடைபெற்று வருகிறது.  இதில், 1,000 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாகும்.
மாணவர்கள் பெறும் பட்டங்கள், பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பட்டங்களை பெறும் மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வியை கற்க வேண்டும். வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணி கிடைத்த காலம் மாறிவிட்டது. தற்போது, பட்டம் பெற்றவர்கள் மாநில அளவில் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக்குள் தேர்ச்சித் தரவரிசையை பெற்றால்தான் அரசுப் பணியில் சேர முடியும். அந்த அளவுக்கு உங்களை தயார் செய்யும் வகையில் உலக அறிவையும், பாடப் பிரிவில் ஆழ்ந்த அறிவையும் பெற வேண்டும். 
ஞானம் என்பது புத்தக அறிவேடு நின்றுவிடுவதில்லை. அதை தாண்டிய விடாமுயற்சி முதன்மையானதாகும். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். சராசரி மனிதனின் வெற்றி என்பது எது என்று சிந்திக்க வேண்டும். எண்ணியவற்றை எண்ணியபடி முடிக்க எந்தளவுக்கு முயற்சியை எடுக்கிறார் என்பதாகும். எண்ணியவற்றை அடைவதற்கு தன்னம்பிக்கையோடு முயற்சி செய்ய வேண்டும். வீட்டில் உங்களை குழந்தையாகப் பார்த்தாலும், வயதால் நீங்கள் மனிதர்களாக சமூகத்தில் கலந்து விட்டீர்கள். முயற்சி எடுத்து உரிய வயதில் அடையவேண்டியதை அடைந்து விட  வேண்டும். நமக்குரிய வாய்ப்புகள் எங்கே உள்ளது என தேடிப்பார்க்க வேண்டும். பெறுகின்ற பட்டத்தை உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் 
ஓ.எஸ். மணியன். 
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் ராமு,  சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பட்டம் பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com