அரசுத் துறைகள் புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்: புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளர் வெ. இறையன்பு அறிவுறுத்தல்

புள்ளி விவரங்களை துல்லியமாகச் சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை அரசுத் துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளவும்

புள்ளி விவரங்களை துல்லியமாகச் சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை அரசுத் துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளவும் அரசுத் துறை அலுவலர்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்தார்.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, மண்டல அளவிலான புள்ளியியல் தரவு பகிர்தல் குறித்த ஒரு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது : 
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் நாகை மாவட்டத்தில் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பயிர் வாரியாக மகசூல் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. டி.ஆர்.எஸ். திட்டம் மூலம் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி விவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிராமக் கணக்குகள், கிராம நிர்வாக அலுவலர்களால் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஜி அறிக்கை திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பசலியிலும், பயிர் பரப்பு விவரங்கள், நீர்ப்பாசன விவரங்கள் மற்றும் வனங்கள் குறித்த விவரங்கள் கிராம வாரியாக ஒத்திசைவு செய்யப்படுகிறது. 
இவைத் தவிர, அங்காடி புலனாய்வுத் திட்டம், வீட்டு வசதித் திட்டம், ஆண்டு தொழில் ஆய்வுத் திட்டம், தேசிய மாதிரி ஆய்வுத் திட்டம், மாநிலக் கணக்குகள் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ், புள்ளியல் துறையின் ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.  
புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் அனைத்து அரசுத் துறைகளும், தாங்கள் சேகரிக்கும் விவரங்கள் மிக துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்ட வேண்டும். ஒவ்வொரு புள்ளி விவரமும், உண்மைத் தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.
 அனைத்துத் துறை அலுவலர்களும், தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை திறந்த மனதுடன் தொடர்புடைய பிற துறைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும். அப்போதுதான், அரசுத் துறைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றார் வெ. இறையன்பு.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கடலூர் மண்டல புள்ளியியல் துறை இணை இயக்குநர் எம். கமலக்கண்ணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறைத் தலைவர் எம். ரவிச்சந்திரன், நாகை வேளாண் இணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் புள்ளியியல் துறை இயக்குநர்கள், புள்ளியியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com