பொருளாதாரச் சீரழிவு மட்டுமே பாஜக அரசின் சாதனை: புதுவை முதல்வர் நாராயணசாமி

நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டது மட்டுமே மத்திய பாஜக அரசின் 4 ஆண்டு கால சாதனை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டது மட்டுமே மத்திய பாஜக அரசின் 4 ஆண்டு கால சாதனை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. இதனால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்குக்கூட வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தி, மக்களுக்குச் சென்றடைய வேண்டிய ரூ. 10 லட்சம் கோடி மத்திய அரசின் கஜானாவுக்கு சென்றுள்ளது. இது மக்களுக்கு செய்யப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.
மத்திய பாஜக ஆட்சியில் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் இதுமட்டும்தான் ஒரே சாதனை. தலித், மலைவாழ், சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வங்கிகளில் நடைபெற்ற மோசடிகளால் மக்கள் பணம் சுரண்டப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மத்திய பாஜக அரசை அகற்றத் தயாராகி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தொடங்கியவுடன் நானும், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவும் மருத்துவத் துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அந்த வைரஸ் பரவாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம்.
அதன்படி, மாஹேவில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களுக்கு நிபா அறிகுறி இருந்தால் தனி வார்டில் வைத்து சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றார் முதல்வர் நாராயணசாமி.
இந்தப் பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் க.லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com