4-ஆவது நிதிக் குழுவின் பலன்களைப் பெற மாநகராட்சிகளுக்குத் தகுதி உண்டு: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நான்காவது தில்லி நிதிக் குழுவின் பலன்களைப் பெற மாநகராட்சிகளுக்கு தகுதி உண்டு. இந்த விவகாரத்தில் இறுமாப்புடன் நடந்து கொள்ள வேண்டாம் என தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

நான்காவது தில்லி நிதிக் குழுவின் பலன்களைப் பெற மாநகராட்சிகளுக்கு தகுதி உண்டு. இந்த விவகாரத்தில் இறுமாப்புடன் நடந்து கொள்ள வேண்டாம் என தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிதல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், "நிகழாண்டு ஏப்ரலில்தான் மூன்று மாநகராட்சிகளுக்கும் தில்லி அரசு நிதி வழங்கியது. 
இந்த நிதி 4-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டதைவிட அதிகமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சிகள் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், "தில்லி அரசு அளித்த நிதி போதுமானதாக இல்லை. அளிக்கப்பட்ட நிதியைக் கொண்டு ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையும், ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. 
கடனாக மாநகராட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி 4-ஆவது தில்லி நிதிக் குழு அளித்த பரிந்துரையில் இருந்ததைவிட குறைவு' எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நான்காவது தில்லி நிதிக் குழு அளித்த பரிந்துரையின்படி கிழக்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி ஆகியவற்றின் ஊழியர்கள், பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய நிலுவை, தற்போது அளிக்க வேண்டிய ஊதியம் ஆகியவற்றுக்கான நிதியை தில்லி அரசு உடனடியாக அளிக்க வேண்டும். இது தொடர்பாக கணக்கு அடிப்படையிலான பிரமாணப் பத்திரத்தை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும். தில்லி அரசுக்கு எதன் அடிப்படையில் தில்லி அரசுக்கு நிதி அளிக்கப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். 
இந்த இடைக்கால உத்தரவு கிழக்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும்' என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசாரணையின் போது தில்லி அரசு குறித்து நீதிபதிகள் கூறுகையில், "நான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தில்லி அரசுக்கு மனதில்லை போலத் தோன்றுகிறது. தில்லி அரசுக்கு மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, மாநகராட்சிகளுக்கு நிதி அளிக்கமாட்டோம் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்ளத் தேவையில்லை. 
மாநகராட்சிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், அவற்றின் ஊழியர்களின் ஒழுக்க நெறிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, மாநகராட்சிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுவிடும்' எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com