சுதந்திர தின ஒத்திகை: தில்லியில் இன்று முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்

சுதந்திர தின நிகழ்ச்சிக்காக தில்லி செங்கோட்டையில் திங்கள்கிழமை முழு சீருடை  ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தலைநகரில்

சுதந்திர தின நிகழ்ச்சிக்காக தில்லி செங்கோட்டையில் திங்கள்கிழமை முழு சீருடை  ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தலைநகரில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட  உள்ளன. 6 சாலைகள் தொடர்ந்து மூடப்பட உள்ளன. மேலும்,  சில சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட உள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தலைநகரில் திங்கள்கிழமை 6 சாலைகள் மூடப்படும்.  அதாவது, நேதாஜி சுபாஷ் மார்க்,  லோதியன் ரோடு,  எஸ்.பி. முகர்ஜி மார்க்,  சாந்தினி சௌக் ரோடு,  நிஷாத் ரோடு ராஜ் மார்க்,  எஸ்ப்ளேனேட்  ரோடு, அதன் இணைப்புச் சாலைகள்  ஆகியவை காலை 5 மணியில் இருந்து காலை 9 மணி வரை மூடப்பட்டிருக்கும். இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் இச்சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது.
ஒத்திகை அணிவகுப்புக்காக வில்லைகள் ஒட்டப்படாத வாகனங்கள் திலக் மார்க்,  மதுரா சாலை,  பஹதுர் ஷா ஜாஃபர்  மார்க்,  சுபாஷ் மார்க்,  ஜவாஹர்லால் நேரு மார்க் மற்றும் நிஜாமுதீன் பாலம் மற்றும் ஐஎஸ்பிடி பாலம் இடையே உள்ள ரிங் ரோடு ஆகியவற்றில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  மாறாக, அந்த வாகனங்கள் வேறு வழித்தடங்களில் செல்ல வேண்டும்.
அதேபோன்று,  வடக்கு - தெற்கு போக்குவரத்தானது அரவிந்தோ மார்க்,  கனாட் பிளேஸ் - மின்டோ சாலை,  ரிங் ரோடு - ஐஎஸ்பிடி மற்றும் நிஜாமுதீன் பாலம் வழியாக திருப்பிட விடப்படும். கிழக்கு - மேற்கு வழித்தடத்தில், டிஎன்டி- தேசிய நெடுஞ்சாலை 24- விகாஸ் மார்க்,  விகாஸ் மார்க் -தீன தயாள் உபாத்யாய் மார்க் ,  பூலேவார்ட்  சாலை- பர்ஃப்கானா சாலை வாழியாக வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும். 
நிஜாமுதீன் பாலம் மற்றும் வாஜிர்பாத் சாலை இடையே ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 11 மணி வரையிலும் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் விட்டு மாநிலம் இயக்கப்படும் பேருந்துகள் மஹாரானா பிரதாப் ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் மற்றும்  சாராய் காலேன் கான் ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் இடையே இரு தினங்களும் 4 மணியில் இருந்து 11 மணி வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
டிடிசி பேருந்து உள்பட உள்ளூர் நகரப் பேருந்துகள் ரிங் ரோட்டில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 4 மணியில் இருந்து காலை 11 மணி வரை செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், ஹனுமான் சேது மற்றும் பைரோன் ரோடு டி-பான்ட் இடையே இயங்குவதற்கும் அனுமதிக்கப்படாது. அவை மாற்று வழித்தடங்களில் செல்ல வேண்டும். செங்கோட்டை,  ஜாமா மசூதி,  தில்லி பிரதான ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பேருந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் அல்லது  வேறு மார்க்கமாக திருப்பிவிடப்படும்.  
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்,  சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளுக்கு அருகே உள்ள மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு மாற்று வழித்தடங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும் என்றார் அந்த அதிகாரி. 

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்கள் மூடல்
சுதந்திர தினப் பாதுகாப்பை ஒட்டி, தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படும் வாகன நிறுத்துமிடங்கள் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மூடப்பட உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎம்ஆர்சி உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிட வசதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 6 மணி முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 15) பிற்பகல் 2 மணி வரை இருக்காது. சுதந்திர தினத்தின் போது கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தை வாகன நிறுத்துமிடங்களை தூய்மைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கருதி தூய்மை இந்தியா திட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துமாறு அனைத்து வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறியும் வகையில் வாகன நிறுத்துமிடப் பகுதிகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்
சுதந்திர தின முழு சீருடை  ஒத்திகையை ஒட்டி,  தில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகள் காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று தில்லி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தின ஒத்திகை தொடர்பாக தில்லி காவல் துறை போலீஸார் சில அறிவுறுத்தல்களை அளித்துள்ளனர். இதையடுத்து, பள்ளிகளுக்கு தில்லி அரசின் கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள உத்தரவில், "தில்லியில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் முழு சீருடை ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது. ஆகவே,  மாணவர்களுக்கு அசௌகரியம் இல்லாமல் இருக்கும் வகையில்,  இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கமான நேரத்திற்குப் பதிலாக காலை 10 மணிக்கு திறக்கப்படும். மேலும்,  பலத்த போலீஸ் ஏற்பாடுகளால் சில பகுதிகளில் பள்ளிகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதன்படி,  ரிங் ரோடு சாலையில் இருந்து ராஜ்காட்  பகுதியை ஒட்டியும்,  ஜேஎல்என் மார்கில் இருந்து ராஜ் காட் ,  ரஞ்சித்  சிங் மேம்பாலம் வரையிலும்,  ஆசஃப் அலி சாலை,  சர்ச் மிஷன் சாலை,  எஸ்பிஎம் மார்க்,  புல் டஃப்ரின் நார்த்,  ஜொராவர் சிங்  மார்க் மற்றும்  யமுனா பஜார் முதல் ஹனுமான் சேது வரை  உள்ள பள்ளிகள் பாதிக்கப்படக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com