வெளிநாட்டு சொத்துக்கள்: திவால் சட்டத்தின் வரம்பை நீட்டிக்க வாய்ப்பு

கடன் மற்றும் நஷ்டத்தால் நொடிந்து போகும் நிறுவனங்களின் வெளிநாட்டு சொத்துகளை கையப்படுத்தும் வகையில் நிதித் தீர்வை மற்றும் திவால் சட்டத்தின் வரம்பு நீட்டிக்கப்படலாம் என்று பெருநிறுவன விவகாரத் துறை

கடன் மற்றும் நஷ்டத்தால் நொடிந்து போகும் நிறுவனங்களின் வெளிநாட்டு சொத்துகளை கையப்படுத்தும் வகையில் நிதித் தீர்வை மற்றும் திவால் சட்டத்தின் வரம்பு நீட்டிக்கப்படலாம் என்று பெருநிறுவன விவகாரத் துறை செயலர் இஞ்சேட்டி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
பெரு நிறுவனங்கள் திவாலாகும் போது, அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவும், அதில் தொடர்புடையவர்களுக்கு உரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வகை செய்வதற்காகவும் புதிய திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது.
திவாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தை அணுக அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு  நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதன் உரிமையாளர், மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக அதன் சொத்துகளை ஏலம் எடுக்க அதில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, வாராக் கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகே நலிவடைந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், நலிவடைந்த நிறுவனங்களுக்குச் சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை கையகப்படுத்தவும், அவற்றை ஏலம் விடவும் வகை செய்யும் வகையில் திவால் சட்டத்தை விரிவுபடுத்த முடியும் என்று இஞ்சேட்டி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய நிறுவனச் சட்ட ஆணையத்துக்கு புதிதாக பலரை நியமிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ) கூட்டத்தில் பங்கேற்ற பெறு நிறுவனத் துறை இணைச் செயலர் ஞானேஸ்வர் குமார் சிங் கூறுகையில், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாய பணியிடங்களுக்கு இதுவரை 500 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com