ஹஜ் மானிய ரத்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண்377-இன்கீழ் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:
ஹஜ் மானியம் ரத்து செய்யும் முடிவு தேவையற்ற ஒன்றாகும். பல ஆண்டுகளாகவே பல காரணங்களுக்காக ஹஜ் யாத்திரை மானியம் குறைக்கப்பட்டு வந்தது. எனினும், அதிக விமானப் பயணக் கட்டணத்தைச் செலுத்த இயலாத ஏழைகள், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு இந்த மானியம் உதவியாக இருந்தது. 
இதனால், இந்த மானியம் தொடர வேண்டும். ஹஜ் மானியத் தொகையானது இந்திய முஸ்லிம்களின் நலத்திற்காக பயன்படுத்தப்படும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், ஹஜ் மானியத்திற்காக ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. ஹஜ் மானியத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
இலங்கை அரசின் மீன்பிடி சட்டம்: மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.அன்வர்ஜா புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:
பல ஆண்டுகளாகவே இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது. இந்நிலையில், இலங்கை அரசு அண்மையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இச்சட்டத்தில், இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடித்தலுக்காக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 லட்சம் அபராதத் தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தவில்லை எனில், சம்பந்தப்பட்ட மீனவர், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்து கடுமையாக முடிவு எடுக்கலாம் என்றும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை தடுப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. 
மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மீன்வளம் மீதான கூட்டு நடவடிக்கைககள் குழு மூன்று முறை சந்தித்துள்ளது. அமைச்சக அளவிலும் பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில், இலங்கை அரசு இதுபோன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருப்பது துரதிருஷ்டவசமாகும். எனவே, இச்சட்டத்தின் பிடியில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வாயிலாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com