தலைநகரில் காற்றின் தரம்: மோசமான பிரிவில் நீடிப்பு

தில்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும்  மிகவும் மோசமான பிரிவில்

தில்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும்  மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. அடுத்து வரும் நாள்களிலும் காற்றின் தரம் மோசமான பிரிவிலேயே நீடிக்கும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தெரிவித்தனர்.
தில்லியில் காற்றின் தரத்தில் கடந்த ஒருவார காலமாகவே ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. ஐந்து தினங்களுக்கு முன்பு காற்றின தரம் மிகவும் மோசமான பிரிவுக்குச் சென்றது. இதனால்,  மத்திய காற்று மாசுக்  கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு அவசரநிலை நடவடிக்கைகளை அமல்படுத்தியது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு காற்றின் தரமானது மிகவும் மோசமான பிரிவு என்கிற நிலையிலிருந்து முன்னேற்றம் கண்டு மோசமான பிரிவுக்கு வந்தது. 
இதற்கு ஆங்காங்கே பெய்த மழை காரணமாகக் கூறப்பட்டது. எனினும், சனிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றது. தலைநகரில் ஆங்காங்கே பட்டாசு வெடித்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலேயே நீடித்தது.
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 301 புள்ளிகள் பதிவாகி இருந்ததாகவும், இது மிகவும் மோசமான பிரிவின் கீழ் வருவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட  தரவுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் சனிக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காற்றின் தரக் குறியீடு 321 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது. ஆனந்த் விஹார்,  முன்ட்கா,  நரேலா, துவாரகா செக்டார் 8,  நேரு நகர், ரோஹிணி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மாசு அளவும் மோசமாகவே இருந்தது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நியமித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ),  தேசியத் தலைநகரில் நிலவி வரும் மாசு குறித்து ஆராய்வதற்காக தில்லி அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தி விவாதித்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இபிசிஏ உறுப்பினர்கள்,  தலைநகரில் நிலவும் காற்றின் தரம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், மோசமான, மிகவும் மோசமான காற்றின் தர நிலை உள்ள இடங்கள் பாதிக்கக்கூடிய இடங்களாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நாசா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட  செயற்கைக்கோள் புகைப்படத்தில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலப் பகுதிகளில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது காணப்பட்டது.  பயிர்க் கழிவுகள் எரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு மத்திய அரசும், பஞ்சாப்,  ஹரியாணா அரசுகள் ஏதும் செய்யாததால் தலைநகர் விரைவில் எரிகலனாக மாறும் நிலை ஏற்பட  உள்ளதாக தனது சுட்டுரையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com