தலைநகரில் குற்றச் சம்பவங்கள் குறைந்தது! காவல்துறை தகவல்

தில்லியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில்

தில்லியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் முக்கிய குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தில்லி காவல் துறை வெளியிட்ட  புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் நிகழ்ந்து வரும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரத் தகவலை, தில்லி காவல்துறை அண்மையில் வெளியிட்டது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள், நிகழாண்டில் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக 1,639 வழக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,673 ஆகப் பதிவாகியிருந்தது.  2017-இல் மானபங்க வழக்குகள் 2,610 பதிவாகி இருந்த நிலையில், நிகழாண்டில் 2,535 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பது புள்ளிவிவரத் தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதேபோன்று, நிகழாண்டில் 357 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் 385 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. 2017, ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் 487 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டுடன்  ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2017-இல் 6,772 வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. இது நிகழாண்டில் 5,034 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் 2,230 கொள்ளை வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில்,  நிகழாண்டில் 1,852 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கன்னமிட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தலைநகரில் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து வந்தது.  தற்போது அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது புள்ளிவிவரத் தகவலில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலின்படி,  2016-இல் 14,307 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில்,  2017-இல் இந்த எண்ணிக்கை 9,819 ஆகக் குறைந்ததுள்ளது. நிகழாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த எண்ணிக்கை 3,090 என்ற அளவில் உள்ளது. கடந்த ஆண்டில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த எண்ணிக்கை  8,327 எனப் பதிவாகியிருந்தது.
வாகனத் திருட்டு வழக்குகளைப் பொருத்தமட்டில், இணையதளத்தின் மூலம் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் 20,449 வாகன திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், 2018-இல் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 33,273 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம், நாளொன்றுக்கு சுமார் 125 வாகனங்கள் திருடப்பட்டு வருவது தெரிய வருகிறது.
அதேபோன்று தலைநகரில் வாகன விபத்துகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் 1,087 வாகன விபத்து வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த  ஆண்டு இதே காலகட்டத்தில் 1,136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணத்துக்காக ஆள்கள் கடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 15 வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், கொடுங் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் 4,853 வழங்குகள் பதிவாகி இருந்தன. நிகழாண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 4,295 ஆகக் குறைந்துள்ளது. 
இந்த எண்ணிக்கை 2014-இல் 10,266ஆகவும், 2015-இல் 11,187ஆகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2016-இல் 8,238 ஆகவும், 2017-இல் 6,527 ஆகவும் குறைந்திருந்ததாக போலீஸ்  புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com