மக்களவைத் தேர்தல்: வீடு, வீடாக பிரசாரத்தை தொடங்கினார் கேஜரிவால்! 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தைத் தொடங்கினார். மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களிடம்  அவர் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியினர் வீடு, வீடாகப்  பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், இதை கட்சியின் தேசிய அமைப்பாளர் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்க உள்ளதாகவும் அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, புது தில்லி மக்களவைத் தொகுதியில் உள்ள கோல்மார்க்கெட் பகுதியில் அவர் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது, கேஜரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக  கட்சியின் 3 ஆயிரம் குழுக்கள் தில்லி முழுவதும் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களிடம் பேசுவார்கள். அடுத்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு வாக்காளரையும் தொடர்பு கொள்வார்கள். மக்களுக்கு சேவையாற்றுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
குடிநீர், மின்சாரம், சுகாதாரம் போன்றவற்றில் அதிகமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மக்களவைத் தேர்தலைப் பொருத்தமட்டில் பிரதமருக்கான தேர்தல் என மக்களில் சிலர் தவறாக நினைக்கின்றனர். இதுகுறித்து மக்களிடம் பேசி புரியவைப்போம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தில்லியின் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தனர். அந்த ஏழு பேரும் என்ன பணிகள் செய்தனர்? ஒருவர்கூட சிறந்த வகையில் பணியாற்றவில்லை.
நான் ஏராளமான மக்களிடம் இது தொடர்பாகக் கேட்டேன். பாஜக எம்பிக்கள் ஒருவர் கூட நற்பணியாற்றவில்லை. மாறாகவே, தில்லி அரசு சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை துணைநிலை ஆளுநர் தடுப்பதற்கான வேலைகளையே செய்தனர்.
சிசிடிவி பொருத்தும் திட்டத்தை நிறுத்தவும், மொஹல்லா கிளினிக்குகளை அமைப்பதைத் தடுக்கவும் துணைநிலை ஆளுநரிடம் பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். பள்ளி, மருத்துவமனைகள், சாலைகள்  அமைப்பதைத் தடுத்தனர்.
தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் ஆம் ஆத்மி கட்சிக்குத் தர வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்த உள்ளோம்.  எங்கள் கரங்களை வலுப்படுத்தினால், அது தில்லியின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவும். நேர்மையாகப் பணியாற்றுவதால் தேர்தலில் போட்டியிட எங்களிடம் பணம் இல்லை. இதனால் தான் வீடு, வீடாகச் சென்று பொது மக்களிடம் ரூ.100 சந்தா கேட்கிறோம். மக்களிடம் பெறும் பணத்தைக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்காக பணியாற்றுவோம் என்றார் கேஜரிவால்.
இதேபோன்று, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கிழக்கு தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள கிச்சிரிபூர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். ஆம் ஆத்மி அமைச்சர்கள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின்,  ராஜேந்தர் பால் கௌதம் ஆகியோர் முறையே மௌஜ்பூர்,  சரஸ்வதி விஹார்,  சுந்தர் நகரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தனர்.

"நன்கொடை தாருங்கள்!'
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த அரவிந்த் கேஜரிவால்,  ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக 14 நிமிடங்கள் கொண்ட  ஒரு  விடியோவை, அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். 
அதில், "தில்லி அரசு நேர்மையுடன் பணியாற்றி வருகிறது.  ஆம் ஆத்மி கட்சி உங்கள் நன்கொடையின் மூலம் இயங்கி வருகிறது. தேர்தலைச் சந்திக்க எங்கள் கட்சிக்குப் பணம் தேவைப்படுகிறது.  உங்களால் முடிந்த நன்கொடையை அளியுங்கள். அப்போதுதான் நாங்கள் நேர்மையுடன் பணியாற்ற முடியும். ஆம் ஆத்மி கட்சியின் சுட்டுரையில் செல்லிடப்பேசி எண்அளிக்கப்பட்டுள்ளது. அதில் நன்கொடை அளிக்க விரும்பும் நபர் "தவறிய அழைப்பு'  (மிஸ்டு கால்) அளிக்கலாம் அல்லது கட்சியின் இணையதளத்தை அணுகலாம்' என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மனத்தில் கொண்டு ஆம் ஆத்மி கட்சி, பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் மாதம்தோறும் கட்சிக்கு நன்கொடையாக ரூ.100, ரூ.1000,  ரூ.10 ஆயிரம் என விரும்பும் தொகையை வழங்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com