திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் குழித்துறையில் நிறுத்தம்: பயணிகள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட உள்ள திருச்சி - திருநெல்வேலி இன்டர் சிட்டி ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம்

திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட உள்ள திருச்சி - திருநெல்வேலி இன்டர் சிட்டி ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதித்துள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக உள்ளது குழித்துறை. விளவங்கோடு மற்றும் கல்குளம் வட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்களின் ரயில் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக உள்ள இந்த ரயில் நிலையம், நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து அதிகளவு பயணிகள் நாகர்கோவில் வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - பிலாஸ்பூர், நாகர்கோவில் - ஷாலிமார் ஆகிய அதிவிரைவு ரயில்களுக்கும், நாகர்கோவில் - காந்திதாம் ரயில், கன்னியாகுமரி - திப்ரூகர் ரயில், திருநெல்வேலி - ஜாம்நகர் ரயில் உள்ளிட்டவற்றுக்கு இங்கு நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில் வழியாக காரைக்காலுக்கு வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது ரயில்வே துறை. இந்த ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை ரயில் பயணிகள் சங்கத்தின் செயலர் பி. பென்ஜேக்கப் சிங் கூறியது: திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில், குமரி மாவட்ட பயணிகள் நெல்லை மார்க்கம் செல்ல பகலில் 10 மணி நேரம் ரயில் இல்லாத குறையை போக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ரயில் மட்டுமே குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் முதல் அதிவிரைவு ரயில் ஆகும்.
இந்த ரயில் இங்கு நின்று செல்வதால் குழித்துறை ரயில் நிலையத்தின் வருவாய் உயரும். இதன் காரணமாக பிற விரைவு ரயில்களுக்கும் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தம் பெற முடியும். மேலும், இந்த வழித்தடத்தில் இனி இயக்கப்படும் புதிய ரயில்கள் அனைத்தும் குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறு இயக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com