நாகர்கோவில் ஹோம்சர்ச் பெண்கள் பள்ளியில் உலக யானைகள் தின விழா

நாகர்கோவில் ஹோம்சர்ச் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யானைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் ஹோம்சர்ச் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யானைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஜான்சி லதா தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூழல் கல்வியாளர் எஸ்.எஸ்.டேவிட்சன் பேசியது: வனத்தில் யானைகள் இருந்தால் வனம் செழிப்பாக,  வளமாக,  ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  ஒரு யானைக்கு தினமும் 150 கிலோ இலை,  தழையும்,  200 லிட்டர் தண்ணீரும் தேவை. இவ்வாறு செழிப்பாக இருக்கும் இடத்தில் மட்டுமே யானைகள் வாழும்.
யானைகள் உண்ணும் கனிகள்,  புற்கள் போன்றவற்றின் விதைகள் அவற்றின் சாணம் மூலமாக பல இடங்களுக்கு பரவலாக்கப்பட்டு அவை முளைத்து,  வளர்ந்து காடுகளில் பல தாவரங்கள் வளர உதவி செய்கின்றன.   
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.  இதில் தமிழகம்,  கேரளம்,  கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.  இது 55 சதவீதமாகும்.  
இன்றைய காலக்கட்டத்தில் யானைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுதல், காடுகளை ஆக்கிரமித்தல்,  தந்தத்துக்காக யானைகளை வேட்டையாடுதல்,  உணவுப் பற்றாக்குறை,  வனங்களில் விவசாயம் செய்தல்,  யானை வழித்தடங்களை அழித்தல் ஆகியவற்றால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
வனங்களில் போதிய தண்ணீர்,  உணவு கிடைக்காததால் யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. வனப்பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து கொடுப்பதாலும், பிற நாட்டு தாவரங்களான உண்ணி செடி போன்றவற்றை அழிப்பதாலும் யானைகள் குடியிருப்புக்குள் வருவதை தடுக்கலாம் என்றார் அவர். ஆசிரியை மோனிகா நன்றி கூறினார்.

உதயகிரி கோட்டையில்...
தக்கலை அருகே புலியூர்குறிச்சி உதயகிரிகோட்டையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட வனத் துறையும்,  தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, வனச்சரகர் புஷ்பராஜா தலைமை வகித்தார்.  குழித்துறை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜோபிரபகாஷ் யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கி,  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்   துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்.
நிகழ்ச்சியில், வனச்சரகர்  பூபதி,  தக்கலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் டானியல் செல்லப்பன்,  பைரவி பவுண்டேசன் இயக்குநர் ஷோபா,  வனக்காப்பாளர் கிருஷ்ணன்குட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com